×

அறநிலையத்துறை கோயில்களின் விபரங்களை அறிய செயலி அறிமுகம்: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: அறநிலையத்துறை கோயில்களின் விபரங்களை அறிய திருக்கோயில் செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழநி ஆண்டவர் கோயில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளிட்டவை பெயர்களில் செயல்படும் போலி இணையதளங்களை முடக்கவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி, சுப்ரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் தனித்தனியே மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை, கோயில்களின் அதிகாரபூர்வ இணையதளங்களைத் தவிர வேறு இணைய தளங்கள் எதுவும் இருக்கக் கூடாது. சட்டவிரோத இணையதளங்களை உடனடியாக முடக்கி, அவற்றின் வருவாயை கணக்கிட்டு பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார், அரசு வக்கீல் வீரேந்திரன் ஆகியோர் ஆஜராகி, ‘‘கோயில்களின் பெயரில் போலியாக செயல்பட்ட 87 போலி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. திருக்கோயில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 48 முக்கிய கோயில்கள் தொடர்பான விபரங்கள் உள்ளன. மற்ற கோயில்கள் அனைத்தும் முழுமையாக பதிவேற்றப்படும். இதோடு அறநிலையத்துறை வெப்சைட்டும் தனியாக பயன்பாட்டில் உள்ளது. அதில் அனைத்து கோயில்களின் விபரங்களும் உள்ளன. ஒவ்வொரு கோயிலின் வெளியில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post அறநிலையத்துறை கோயில்களின் விபரங்களை அறிய செயலி அறிமுகம்: ஐகோர்ட் கிளையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Tiruchi Srirangam Ranganathar Temple ,Dinakaran ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...