×

ஆண்டிபட்டி பகுதி காளவாசல்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் விலை நிர்ணயம் செய்யப்படுமா?

*செங்கல் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் செங்கல் காளவாசல்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் அதிகளவு விற்பனை இருந்தும் விலையில்லாததால் செங்கல் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் ஆண்டிபட்டி ஒன்றியம், கடமலை-மயிலை ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்கள் உள்ளன. இதில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் 150க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளன.

இதேபோல் கடமலை-மயிலை ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் 50க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளன. ஆண்டிபட்டி தாலுகா பகுதியை சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இதேபோல் இந்த பகுதிகளில் வண்டல், செம்மண் அதிகளவு கிடைப்பதால் அதிகமான செங்கல் காளவாசல்கள் உள்ளன. ஆண்டிபட்டி சுற்றியுள்ள பிச்சம்பட்டி கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி, கதிர்நரசிங்கபுரம், தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன.

காளவாசலுக்கு தேவையான வண்டல், செம்மண் ஆகியவை இந்த பகுதியில் அதிக அளவு கிடைப்பதால் பலரும் ஆர்வமுடன் காளவாசல் தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள செங்கல் காளவாசல்களில் மாதம் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மற்றும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

ஆண்டிபட்டி பகுதிகளில் சில ஆண்டுகளாக மானாவாரி விவசாயம் கை கொடுக்காததால் விவசாயிகள் பலரும் தங்கள் நிலத்தில் செங்கல் காளவாசல் வைக்கவும் அல்லது செங்கல் காளவாசலில் தொழிலாளியாக பணிபுரியவும் செல்கின்றனர். அனைத்து காளவாசல்களிலும் மாதத்திற்கு அதிக அளவு செங்கல் உற்பத்தி செய்யப்பட்டாலும் தொழில் போட்டி அதிகரித்ததால் செங்களை தேக்கி வைக்கும் நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர். உற்பத்தி செய்யப்பட்ட செங்கலை தொடர்ந்து இருப்பில் வைக்க முடியாததால் தொழில் போட்டி காரணமாக விலையை குறைத்து விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஒரு செங்கலின் விலை சராசரியாக 7 ரூபாய் முதல் 9 ரூபாய் வரை விலை போகும்.‌ சராசரியான வெயில் மற்றும் சாதாரண காலங்களில் செங்கல் விலை குறைந்த விலைக்கு விற்கப்படும். ஆனால் மழைக்காலங்களில் செங்கல் விலை அதிகரித்து விற்கப்படும். தற்போது இரண்டுமே இல்லாமல் தொழில் போட்டியால் குறைந்த விலைக்கு செங்கல் விற்கப்படுகின்றது. தற்போது ஒரு செங்கல் ரூ.5 முதல்‌ ரூ.5.50 வரை விற்கப்படுகிறது‌. உற்பத்தி செலவு தொழிலாளர்கள் கூலி செலவு என செங்கல் உற்பத்தியில் செலவுகள் அதிகரித்து வருவதால் பல காளவாசல்கள் நஷ்டத்தால் மூடப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை தொடர்ந்து இருப்பில் வைக்க முடியாததால் பலரும் குறைந்த விலைக்கு அல்லது கடனுக்கும் செங்கலை விற்றுவிடுகின்றனர். இதனால் இவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவது உடன் கடன் தொகையை வசூல் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். கட்டுமான தொழிலுக்கு செங்கல் மிக முக்கியமானது என்ற போதிலும் பொறியாளர்கள், காண்ட்ராக்டர்கள் லாபம் ஈட்டினாலும் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை.

இதுகுறித்து செங்கல் காளவாசல் உரிமையாளர்களிடம் கேட்டபோது, ‘‘செங்கல் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்கள் அனைத்தும் விலை அதிகமாகியுள்ளது. குறிப்பாக வண்டல் மற்றும் செம்மண் விலை அதிகமாகியுள்ளது. செங்கலை காய வைப்பதற்கான விறகுகளின் விலையும் அதிகமாகி உள்ளது. இதேபோல் காளவாசலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு கூலியும் அதிகமாக கொடுக்கப்பட வேண்டி உள்ளது. இதே போல் வாகன வாடகை போக்குவரத்து செலவு அனைத்தும் அதிகமாகிறது. இந்த தொழிலை நம்பி உள்ளூர் மற்றும் வெளியூர்களில்‌ இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே நிலை ஏற்பட்டால் ஏராளமான செங்கல் காளவாசல்கள் மூடும் நிலை ஏற்படும். மேலும் சிலர் தொழில் நடந்தால் போதும் என்ற நிலையில் வீட்டில் இருப்பவர்களை வைத்து காளவாசல்களை தொடர்கின்றனர். தற்போது செங்கலை கடனுக்கு கேட்டு நிபந்தனை அளிக்கின்றனர். வேறு வழியின்றி குறைந்த விலைக்கு கடனுக்கு கொடுத்துவிட்டு தொழிலை தொடர முடியாமல் உள்ளோம். மேலும் செங்கல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் தொழில் தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அனைத்து காளவாசல்களிலும் ஒரே விலையை நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post ஆண்டிபட்டி பகுதி காளவாசல்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் விலை நிர்ணயம் செய்யப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Antipatti ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!