×

இன்னொரு சுமை

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விண்ணப்பிக்க வருகிற 10ம் தேதி கடைசி நாள். இந்நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான தேசிய எக்ஸிட் டெஸ்ட் என்ற ‘நெக்ஸ்ட்’ (National Exit Test) தேர்வு அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

நெக்ஸ்ட் தேர்வு, படி-1 மற்றும் படி-2 என இரண்டு படிகளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகளை கொண்டது. இதில், கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர். தொடர்ந்து, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில்தான் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இத்தேர்வு இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. ‘நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும். கடந்த 2014ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு பொறுப்பேற்றவுடன், மருத்துவ மாணவர்களுக்கு ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வை ஏற்படுத்தி நாடு முழுவதும் இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அடுத்ததாக நெக்ஸ்ட் என்ற பெயரில் தகுதித்தேர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் பயிற்சி மருத்துவராகவும், முதுநிலை மருத்துவப்படிப்பை தொடர்வதற்கும், வெளிநாடுகளில் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவத்துறையில் பணியாற்றவும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்ற நிலையை தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கியுள்ளது. நெக்ஸ்ட் முதல் தேர்வு, மே மாதத்திலும், நெக்ஸ்ட் இரண்டாவது தேர்வு, நவம்பர் மாதத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி தேர்வு வரும் 28ம் தேதி நடக்கிறது.

இதன் மூலம் எம்பிபிஎஸ் முடித்து ‘நெக்ஸ்ட்’ முதல் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் மட்டுமே பயிற்சி மருத்துவராக செயல்பட முடியும். தொடர்ந்து மருத்துவ முதுகலை பிரிவான பிடிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘நெக்ஸ்ட்’ இரண்டாம் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். ஒன்றிய அரசின் இத்தேர்வு முறைக்கு, மருத்துவ மாணவர்கள், மருத்துவர் மற்றும் மாணவர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் இத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, ‘நீட்’ தேர்வு மாநிலத்தினுடைய உரிமைகளை பறித்து, மாணவர்களுடைய மருத்துவ கனவை சிதைத்து வருகிறது. இதில் ‘நெக்ஸ்ட்’ தேர்வு மேலும் ஒரு சுமையாக மாறியிருக்கிறது. எந்த தேர்வாக இருந்தாலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறித்த செய்திகள், அவர்களுடைய லட்சியம், விருப்பம் இதெல்லாம்தான் ஊடகங்களில் பரவலாக வலம் வரும். ஆனால், ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த நீட் தேர்வு, நமக்கு பல மரணச்செய்திகளை கொண்டுவந்து சேர்த்தது. அந்த அழுகுரல் அடங்கும் முன்பு தற்போது, ‘நெக்ஸ்ட்’ என்னும் ஆக்டோபஸ் வலையை ஒன்றிய அரசு விரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்னொரு சுமை appeared first on Dinakaran.

Tags : MBBS ,BDS ,Tamil Nadu ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை