×

மாநிலங்களவை எம்பி பதவியை வழங்கி அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிப்பு?..தமிழக பாஜவில் மீண்டும் பரபரப்பு

சென்னை: மாநிலங்களவை எம்பி பதவி வழங்கி, அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிக்கப்படுகிறதா? என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜ தலைவராக உள்ள அண்ணாமலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுடனும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக அதிமுக செயற்குழுவில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார். இதனால், அண்ணாமலை கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக டெல்லி வருமாறு மேலிடம் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் அவர் கடந்த 13ம் தேதி அவசரம் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அண்ணாமலையின் பதவிக்கு மேல் ஒரு புதிய பதவியை உருவாக்கி அதில் நிர்மலா சீதாராமனை அமர வைக்க போவதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை வருகிற 28ம் தேதி முதல் 6 மாத காலம் பாதயாத்திரையை தொடங்க உள்ளார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக நேற்று பாஜ வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இது வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.

ஏற்கனவே தமிழக பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கனவே தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது. மேலும் ஒன்றிய இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தான் வகித்து வந்த மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல பாஜ மூத்த தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் கவர்னர் பதவி வழங்கப்பட்டது. இதனால், அவர்களும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்தனர்.

அதாவது தமிழக பாஜவில் ஒரு பதவி வழங்கும்போது ஏற்கனவே வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்வது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கும் பட்சத்தில் அவரின் மாநில தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பாஜ மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறது. அதேநேரத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதில் கட்சி மேலிடம் மும்முரமாக இருக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் மாநில தலைவர்களுக்கு மாநிலங்களவை எம்பி வழங்குவது பற்றி மேலிடம் பரிசீலிக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் வேண்டுமானால், அது போல் ஏதாவது மாநிலங்களவை பதவி வழங்கப்படலாம். மாநிலத்திற்காக பணியாற்றுவதில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறியுள்ளார். அதனால், அவர் மாநிலங்களவை பதவியை ஏற்பதில் சிக்கல் உள்ளது’’ என்றார்.

The post மாநிலங்களவை எம்பி பதவியை வழங்கி அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிப்பு?..தமிழக பாஜவில் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Rajya Sabha ,CHENNAI ,Tamil Nadu ,Tamilika BJP ,Dinakaran ,
× RELATED அக்னி வீர் திட்டத்தை ரத்து செய்ய...