கேட்டதை அளிக்கும் நாமம்

சிந்தாமணி க்ருஹாந்தஸ்தாதொடர்ச்சி….

நம்மைப் பார்த்து யாராவது யார் இதைச் செய்வது என்றால் நான் செய்தேன்… என்று சொல்லும்போது நம்மை அறியாமல் நம்முடைய சுட்டு விரல் நம்முடைய வலது மார்பகத்தை நோக்கி சுட்டப்படுவதை கவனிக்கலாம். அப்போது நான் என்பதன் உற்பத்தி ஸ்தானம் என்பதே வலது பக்க மார்புதான். இதுவே இருதய ஸ்தானமுமாகும். ஏன் இப்படி வலதுபுற நெஞ்சை நோக்கி சுட்டிக் காட்டுகிறோமெனில்… இந்த அஹம் என்கிற ஸ்புரணம் நமக்கு நெஞ்சிலிருந்துதான் தொடங்குகின்றது. இந்த நான் என்கிற ஸ்பூர்த்தியினுடைய ஸ்தானம் எதுவெனில் இருதய ஸ்தானமேயாகும். மீண்டும் பார்ப்போம். இப்படி நீர் போன்று கட்டற்று ஓடிக் கொண்டே இருக்கின்ற மனமானது கெட்டியாகி அது அந்தர்முகமாக மாறி அப்படியே சொரூபத்தில் போய் நின்று எங்கு அந்த சொரூபம் ஆரம்பிக்கின்றதோ… அந்த இருதய ஸ்தானத்தில் மனமானது ஒடுங்கும்போது… அங்கு அஹம் என்கிற ஸ்பூர்த்தி வடிவாக அம்பாள் இருக்கிறாள். சிந்தாமணி க்ரஹ அந்தஸ்தா… சிந்தாமணி என்கிற க்ருஹத்திற்கு உள்ளே… மிக ரகசியமாக உறைபவளாக… இருக்கக் கூடியவளே லலிதையான அம்பாள். இப்படியாக ஒரு சாதகன் இந்த நாமத்தைக் கொண்டு தியானிக்கும்போது அவனுக்கு உள் அனுபவமாகவே இது சித்தித்து விடுகின்றது.

மீண்டும் பார்ப்போம்… இதற்கு முன்னால் உள்ள நாமாக்கள் சொல்லும் தத்துவார்த்தமான ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களை தாண்டி வந்து அகமுகமாகும்போது சாதாரண மனம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன்… மனமே சிந்தாமணியாக மாறுகின்றது. இப்படி மனமானது உள்முகப்பட்டு சொரூபத்திற்கு சென்று நிற்கும் பாவத்திற்கு (bhavam) உன்மணீ பாவம் என்று பெயர். நம்முடைய மனதானது எப்போது உன்மணீ பாவத்திற்கு சென்று நிற்கின்றதோ… அங்கு அம்பாள் மனோன்மணியாக வெளிப்படுவாள். சிந்தாமணியான மனமானது இப்போது உன்மணீ பாவத்தை ஏற்று மனோன்மணியான அம்பாளிடம் சென்று சேருகின்றது. ஒருமுறை ரமண பகவான் பழனிசுவாமி எனும் அடியாரின் இறுதி நேரத்தின்போது, இருதயத்தில் கை வைத்து அந்த ஜீவனை இருதய ஸ்தானத்தில் கொண்டுபோய் சேர்க்க முனையும்போது பழனி சுவாமிகள் சட்டென்று வேறு உலகை.. கதியை அடைந்தார். ஆனால், ரமண பகவான் தன்னுடைய தாயின் விஷயத்தில் அப்படி நேராமல் தாயின் ஜீவனானது வேறு எங்கும் செல்லாது இருதயத்தில் சென்று ஒடுங்கும் வரையில் காத்திருந்து விட்டு அப்படி சேர்ந்தபின்னர் ஒரு நாதம் வரும் வரையிலும் காத்திருந்ததாக கூறுவார்.

அங்கு மனோன்மணியிடமிருந்து ஒரு அநாகத நாதமொன்று ஒலித்த பிற்பாடே அந்த ஜீவன் முற்றிலுமாக இருதயத்தில் சென்று கரைந்ததை ஞானிகள் உறுதிப்படுத்துவார்கள். இப்படி ஒரு சாதகன் பகிர்முகமாகமான பார்வையை விட்டு, அந்தர்முகமாக செலுத்துவதையே உன்மணீ தியானம் என்பார்கள். பாகவதத்தில் ராசலீலையின்போது கோபிகைகள் தன் மனஸ்காஹா… ததாலாபா… என்று வரும். அதாவது அவர்களின் மனமானது முற்றிலும் உள்முகமாக இருதயத்தை நோக்கியே இருந்தது. அங்கு கிருஷ்ணனையே தரிசித்தபடி இருந்தனர் என்று வரும். அதுபோல இங்கும் சாதகனானவன் உன்மணீ என்கிற தியானத்தை கைக்கொண்டு அந்தர்முகப்பட்டு அந்த சிந்தாமணி என்கிற கிரகத்தையும் அதாவது இருதய ஸ்தானத்தையும் அதன் மத்தியில் ஆதியும் அந்தமும் அற்ற சிதக்னி குண்டம் என்கிற அம்பாளின் உற்பத்தியான அஹம் ஸ்பூர்த்தியாகும் இடத்தையும் நோக்கியே இருங்கள் என்று இந்த நாமம் சொல்கின்றது. இந்த நாமத்தின் உச்சாடணத்திலேயே இதற்கான தியானமும் உள்ளது. மெதுவாக இந்த நாமத்தை உச்சரித்தபடியே இருங்கள். மெல்ல மெல்ல உங்களின் மனதை ஒரு அமைதி சூழும். மெல்ல அந்த நாமமே உங்கள் மனதை சிந்தாமணியாக மாற்றும் என்பதை அறிவீர்கள். ஏனெனில், இந்த நாமங்கள் எல்லாமே சொற்கள் அல்ல. இந்த நாமங்கள் எல்லாம் படகு மாதிரி உங்களிடத்தில் செயல்படும். அந்த நாமாவே உங்கள் மனதை மெல்ல மெல்ல அந்த நாமா என்ன சொல்கின்றதோ… எதைச் சுட்டிக் காட்டுகின்றதோ அங்கு சென்று சேர்க்கும். ஏனெனில், அம்பாளின் மந்திரத்திற்கே சிந்தாமணி மந்திரம் என்றே சொல்வார்கள்.

அதேபோல, மனோன்மணி என்பது சித்தர்களின் உபாசனை தெய்வமாவாள். எல்லா சிவன் கோயில்களிலும் சிவலிங்கத்திற்கு அருகேயே ஸ்தூல பிம்பமாகவோ அல்லது சூட்சுமமாகவோ மனோன்மணியே திகழ்கிறாள். சாஸ்திரத்தில் அவளுக்கும் ஒவ்வொரு முறை ஆரத்திகாண்பிப்பதாகச் சொல்லியிருக்கிறது. மனோன்மணீயே அதாவது உன்மணீயே ஒவ்வொரு ஜீவனின் உயர்ந்த நிலையாகும். இந்த நிலையை அடைவதே ஒவ்வொரு ஜீவனின் லட்சியமும் ஆகும். இதை மனதில் நன்கு கொண்டால் இந்த நாமம் எப்பேற்பட்ட விஷயத்தை பேசுகின்றது என்பது புரியும். இதற்கான ஆலயமாக திருஈங்கோய்மலை லலிதாம்பிகை ஆலயத்தைச் சொல்லலாம். மிகமிக ஆச்சரியமாக ஸ்ரீவித்யா தீட்சை பெற்ற பெண் யோகினிகளால் மட்டுமே இந்தக் கோயில் பூஜை செய்யப்படுகிறது. இது மலைமீதுள்ள ஆலயமாகும். அகத்திய முனிவர், ஈசனை தேனீ வடிவில் சென்று வழிபட்ட தலம் திருஈங்கோய்மலை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் புராதனப்பெயர் சாயாவனபுரம். திரு ஈங்கோய்மலைக்கு அருகில் ஒரு பாறையின்மீது அமைந்துள்ள ஸ்ரீலலிதா மஹிளாமந்திர், சக்தி பீடதலமாகத் திகழ்கிறது. ஈசனின் பெயர் மரகதாசலேஸ்வரர் என்பதாகும்.

முழுக்க முழுக்க ஸ்ரீவித்யாதீட்சை பெற்று துறவிகளாகவுள்ள யோகினியர்களும், தியாகினிகளும் இத்தலத்தில் வழிபாட்டு முறைகளைச் செய்கிறார்கள். கன்னிப் பெண்களால் நிர்வகிக்கப்படும் இத்திருக்கோயிலின் தெற்குப் பகுதி வாசலின் நுழைவாயிலின் இடதுபுறம் சிறிய அளவில் விநாயகப்பெருமான் தரிசனமளிக்கிறார். அவரை வழிபட்டுவிட்டு ஆலயத்திற்குள் சென்றால் பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் ஒரு மேடையில் எழுந்தருளியுள்ள லலிதாம்பிகை வெள்ளைப் பளிங்கினாலான திருமேனியளாய்த் திகழ்கிறாள். அம்பிகையின் இடது கை கரும்பினை ஏந்த, வலது கையில் ஐந்து வகை பூக்களால் ஆன புஷ்பபாணம் இருக்கிறது. இடது கீழ் கையில் பாசமும், வலது கீழ் கையில் அங்குசமும் இருக்கின்றன. அம்பிகை எழுந்தருளியுள்ள பீடம் மேருபீடம் என போற்றப்படுகிறது.

கருவறையில் அருள் புரியும் அம்பிகைக்கு காலை, மதியம், மாலை என வழிபாடுகள் நடைபெறுகின்றன. வழிபாடுகள் முடிந்ததும் கருவறையின் கதவை மூடினாலும் பக்தர்கள் எந்தநேரத்திலும் அம்பிகையைத் தரிசிக்கக் கூடிய வகையில் அதன் கதவில் நிறைய துளைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அன்னையின் வாகனமான சிங்கம் அம்பிகையின் எதிரில் கம்பீரமாக வீற்றிருக்கின்றது. அன்னை சந்நதிக்கு எதிரே லலிதாம்பிகையின் திருவுருவப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பிராகாரத்தின் வடபுறத்தில் உள்ள பெரிய மண்டபம் ம்ருத்யுஞ்ஜய மண்டபம் என அழைக்கப்படுகிறது. அதில் உள்ள ஒரு மேடையில் லலிதாம்பிகையின் சுதை வடிவம் எழிலுற தரிசனமளிக்கிறது. அதன்முன் யாக குண்டம் உள்ளது. அந்த யாக குண்டத்தில் தினமும் யாகங்கள் செய்யப்படுகின்றன.இங்கு நடைபெறும் பல்வேறு விதமான யாகங்களையும் இங்குள்ள யோகினிகளே நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த யோகினிகள் சாத்திரங்கள், கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம், ஞானயோகம் போன்றவற்றைப் பயின்றவர்கள். இத்தலம் ஸ்ரீசக்ர ராஜபரிபூர்ண மஹாமேருபீடம் என்றும் அழைக்கப்படுகிறது.51 சக்தி பீடங்களில் இத்தலம் சாயாபீடம் எனப் போற்றப்படுகிறது. ஈசனின் மனைவியான தாட்சாயிணி தேவியின் முக சாயை இந்த மலையில் விழுந்ததால் இது சாயாபுரம் என்றும் பெயர் பெற்றுள்ளது. மேலும் இத்தலம் லலிதாம்பிகை க்ஷேத்திரம், ஆதி பீஜாக்ஷர தலம், மரகதாசலம், யோகினிபீடம், திருஈங்கோய்மலை, சிவசக்திதலம் என்றும் பலவாறாக அறியப்படுகிறது.ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இடைவிடாது ஸ்ரீசக்ரமஹாமேருவிற்கு அபிஷேகஆராதனைகள் நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் உள்ள மணமேடு எனும் இடத்தில் இத்தலம் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் செல்கின்றன.
(சுழலும்)

The post கேட்டதை அளிக்கும் நாமம் appeared first on Dinakaran.

Related Stories: