×

கண் குறைபாடுகளை நீக்கி அருளும் நேத்ரபுரீஸ்வரர்

கிணார், செங்கல்பட்டு மாவட்டம்

செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த கலைநயமிக்க கோயில்கள் ஏராளமான அமைந்துள்ளன. மதுராந்தகம் வட்டத்தில் கிணார் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கம்பாநாயகி சமேத வீரவரநாதர் என்கிற நேத்ரபுரீஸ்வரர் திருக்கோயிலும் இதில் ஒன்றாகும். இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வூர், முற்காலத்தில் நேத்ரபுரம் அல்லது திருக்கண்ணார் என்றும் அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது கிணார் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்து ஈசனை கெளதம முனிவர், அகல்யா, பாண்டவர்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தேவேந்திரன் சாபவிமோசனம் பெற்ற தலமாகும்.

அகல்யாவின் சாபத்தினால் தேவேந்திரன் தன் உடல் முழுவதும் ஆயிரம் கண்களைப் பெற்றதாகவும், சாபவிமோசனத்திற்காக இத்தலத்திற்கு வந்து நேத்ரபுரீஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால், இத்தலம் திருக்கண்ணபுரம் என்று அழைக்கப்பட்டது. இத்தலம் சுக்ரனுக்கு பரிகார ஸ்தலமாகும். மேலும், இத்தலத்து ஈசனை வழிபட்டால் கண் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பதும் ஐதீகம். இத்தலத்து வீரவரநாதரை வெள்ளிக் கிழமைகளில் வழிபட திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ராஜகோபுரமின்றி நுழைவு மண்டபமானது தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயம். கோயிலானது கருவறை சந்நதி, அந்தரளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் முகமண்டபம் ஆகிய அமைப்பைக் கொண்டு திகழ்கிறது. மகாமண்டபத்தில் மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய நால்வரும் ஒரு மேடையில் வீற்றிருக்க அருகில் ஒரு சிறு சந்நதியில் கற்பக விநாயகர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மேலும், காசிவிஸ்வநாதர், வள்ளி முருகன் தெய்வானை, பாலமுருகன், பைரவர், சிவசூரியன் முதலான தெய்வங்கள் அமைந்துள்ளார்கள்.

மகாமண்டபத்தில் மேற்கு திசை நோக்கி, அருள்மிகு வரதராஜப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நந்திக்கும் மூலவருக்கும் நடுவில் யானை மீது தேவேந்திரன் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இது ஒரு அரிதான அமைப்பாகும். கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன கணபதி, மேதா தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை அமைந்துள்ளார்கள். சண்டிகேஸ்வரர் சந்நதியும் அமைந்துள்ளது.

கருவறையில் மூலவர் லிங்கவடிவத்தில் வீரவரநாதர் எனும் நேத்ரபுரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருளுகிறார். மூலவரின் பின்பக்க கருவறை சுவற்றில் சோமாஸ்கந்தர் வடிவம் வேறெங்கும் இல்லாதவிதமாக வித்தியாசமாக அமைந்துள்ளது. பல்லவர்களின் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவன் கோயில்களின் சிறப்புகளில் இதுவும் ஒன்று. மகாமண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் அமைந்துள்ளன.

அம்பாள் ஸ்ரீகம்பாநாயகி தெற்கு நோக்கி தனி சந்நதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருளுகிறார். அருகில் நவகிரக சந்நதி அமைந்துள்ளது. கோயில் தீர்த்தம், கோயிலுக்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மஹாகும்பாபிஷேகங்கள் 1994 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் 28 ஆகஸ்டு 2024 அன்று மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை.எப்படி செல்வது?: கிணார் கிராமம், மதுராந்தகத்திற்கு அருகில் அமைந்துள்ள கருங்குழி மேலவலம்பேட்டையில் இருந்து திருக்கழுக்குன்றம் பிரதான சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் T3 என்ற நகரப் பேருந்து கிணார் வழியாகச் செல்லுகிறது. செங்கல்பட்டிலிருந்து 27 கி.மீ தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 21 கி.மீ தொலைவிலும் கிணார் கிராமம் அமைந்துள்ளது.

ஆர்.வி.பதி

The post கண் குறைபாடுகளை நீக்கி அருளும் நேத்ரபுரீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருமலையின் திருமணி