×

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சலுகை விலையில் காய்கறிகள் விற்பனை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருமலை: ஆந்திராவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் 35 பேர் இறந்ததாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மழையால் 1 லட்சத்து 69 ஆயிரத்து 370 ஏக்கர் நிலத்தில் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 18,422 தோட்டக்கலை பயிர்கள் சேதமானதாகவும், 3,973 கிலோ மீட்டர் சாலைகள் சேதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயவாடா ெவள்ளப்பெருக்கிற்கு முக்கிய காரணமாக 2 நாட்களில் 40 சென்டிமீட்டர் மழை பெய்தது. பின்னர் கிருஷ்ணா நதி மேற்பரப்பில் அதிக மழை காரணமாக 11 லட்சத்து 43 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததால் இந்த நகரமே வெள்ளக்காடாக மாறியது முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் வெள்ள சேத பாதிப்புகளை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று மாலை பார்வையிட்டார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் இருந்து சேத விவரங்களை கூறினார். நேற்று நள்ளிரவு மீண்டும் ஆய்வு பணி மேற்கொண்ட முதல்வர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரகாசம், கிருஷ்ணா நதியின் மத்தியில் உள்ள விஜயாவாடாவில் 100 ஆண்டுகளுக்கு முன் பிரகாசம் அணை கட்டப்பட்டது. இந்த அணையை வலுப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக ராணுவ பொறியாளர்கள் குழுவினர், அணை பாதுகாப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள சேத விவரங்களின் முதல் அறிக்கை இன்று மாலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மழையால் விஜயவாடாவில் உடுத்தியுள்ள உடையை தவிர மற்ற அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அத்தியாவசிய உணவு பொருட்களான காய்கறிகளை சலுகை விலையில் விற்பனை செய்ய முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி தக்காளி, காய்கறிகள் உள்ளிட்டவை கிலோ ₹2 முதல் ₹5க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அதேபோல் மேலும் சில அத்தியாவசிய பொருட்கள் சலுகை விலையில் விற்கப்படும் என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

The post ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சலுகை விலையில் காய்கறிகள் விற்பனை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chandrababu Naidu ,Thirumalai ,government ,
× RELATED மழை வெள்ளத்திற்கு பயந்து தலைநகரை...