×
Saravana Stores

கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, மாமல்லபுரம், கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளின் நில அழகையும், கடல் அழகையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக கோவளத்தை மையமாகக் கொண்டு தனியார் ஹெலிகாப்டர் சேவை கடந்த நவம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்கப் பட்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இந்தத் திட்டத்தால் மக்களுக்கும், சூழலியலுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்

கம்போடியா நாட்டைச் சேர்ந்த ஏரோடான் சாப்பர் (கம்போடியா) கம்பெனி லிமிடெட் (Aerodon Chopper (Cambodia) Co., Ltd.) என்ற நிறுவனம் அதன் இந்திய துணை நிறுவனமான ஏரோடான் சாப்பர் பிரைவேட் லிமிடெட் (Aerodon Chopper Pvt., Ltd. (India)) மூலம் சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளது. கேளம்பாக்கம் & கோவளம் சாலை சந்திப்பு அருகில் இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர் மையம் கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.

கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணிகளை ஏற்றிச் சென்று சென்னையின் முக்கிய இடங்கள், கோவளம், மாமல்லபுரம், கடற்கரை பரப்புகள் ஆகியவற்றை சுற்றிக்காட்டும் சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகிறது.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுற்றுலாவை வளர்க்கவும், வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கவும், அதன் வழியாக கிழக்குக் கடற்கரை பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை பெருக்கவும் நவீன சுற்றுலாத் திட்டங்கள் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சுற்றுலா வளர்ச்சிக்கான திட்டங்களை தனிப்பட்ட முறையில் நானும், கொள்கை அளவில் எனது தலைமையில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் கோவளம் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாழும் மக்களுக்கு இந்தத் திட்டங்கள் எவ்வகையிலும் இடையூறாக இருக்கக் கூடாது.

கோவளம் ஹெலிகாப்டர் நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்படும் போது எழும் இரைச்சல் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. கிழக்குக் கடற்கரையில் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால் மிக அதிக இறைச்சல் எழுகிறது. இது பொதுமக்களுக்கு மட்டுமின்றி பறவைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்கள். அதனால் காலம் காலமாகவே வெளிநாட்டு பறவைகள் இந்தப் பகுதிகளுக்கு வலசை வருகின்றன.

உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக சென்னை & கோவளம் பகுதியில் உள்ள முட்டுக்காடு , கேளம்பாக்கம் உப்பங்கழிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வரும். ஹெலிகாப்டர் தாழ்வாக பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், காலப்போக்கில் முட்டுக்காடு, கேளம்பாக்கம் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருவது முற்றிலுமாக நின்று விடும் ஆபத்து உள்ளது.

கோவளத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகியன அதிக எண்ணிக்கையில் பறவைகள் உள்ள பகுதி ஆகும். ஹெலிகாப்டர் சுற்றுலாவால் இந்தப் பகுதிகளிலும் பறவைகளின் வலசை வருகை பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பாதிக்கப்படும். இதற்கான ஒரே தீர்வு ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிப்பது மட்டும் தான்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளையும், உள்ளூர் பறவைகளையும் பாதுகாப்பதற்காக தமிழக அரசு காலம் காலமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சரணாலயத்திலிருந்து 5 கி.மீ சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் இருக்கிறது. அங்கு பறவைகள் அந்த அளவில் பாதுகாக்கப்படும் நிலையில் கோவளம் பகுதியில், வெடிகளை விட பல மடங்கு இரைச்சல் எழுப்பும் ஹெலிகாப்டர் சுற்றுலாவை எந்த அடிப்படையில் தாங்கள் அனுமதித்தீர்கள் என்பது தெரியவில்லை.

இத்தனைக்கும் ஹெலிகாப்டர் தளம் அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஆயிரக்கணக்கில் பறவைகள் கூடும் இடம் உள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த உண்மைகளை ஆய்வு செய்த பிறகாவது ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும். நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் முதல் 30 ஆம் நாள் வரை கோடை விழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஹெலிகாப்டர் சுற்றுலாவை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதை எதிர்த்து முருகவேல் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையில் தனித்துவமான நுண்தாவரங்களும், உயிரினங்களும் உள்ளன.

அப்பகுதியில் 10 நிமிடங்களுக்கு ஹெலிகாப்டர் பறந்தால் கூட அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். ஹெலிகாப்டர் சுற்றுலாவால் ஏற்படும் இரைச்சலால் கழுகுகள், மலை இருவாச்சி (Great Indian Hornbill) போன்ற அரியவகை பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்’’ என்று முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதித்தது. அதுமட்டுமின்றி, ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத மடத்தனமான வணிகவாதம் (crass commercialism) என்று விமர்சித்த நீதிபதிகள், இதனால் ஊட்டியில் சூழலியலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் எச்சரித்தனர்.

ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த அனைத்து கருத்துகளும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கும் பொருந்தும். ஊட்டியில் 18 நாட்கள் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவதால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றால், கோவளத்தில் ஆண்டின் 365 நாட்களும் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தப்பட்டால் இன்னும் பல மடங்கு அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

எனவே, பொதுமக்கள், பறவைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நலன் கருதி கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவதற்கு தாங்கள் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், மக்களைத் திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்துவதற்கும் பாமக நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

The post கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kovalam ,Anbumani ,Chennai ,BAMA ,President ,Anbumani Ramadoss ,Tamil Nadu Government's ,Forest and Environment Department ,Supriya Chagu ,Chengalpattu ,District ,Collector ,Rahul ,
× RELATED கால்பந்து திடல்களை தனியாரிடம்...