×

வெடிமருந்து பெட்டி தவறி விழுந்ததில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; தொழிலாளி பலி: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

சேலம்: பட்டாசு தொழிற்சாலையில் வெடிமருந்து பெட்டி தவறி விழுந்து வெடித்ததில் தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் குப்பனூர் வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(52). இவர் காரிப்பட்டி வெள்ளியம்பட்டியில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையும், குடோனும் வைத்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெட்டிலையூரணியை சேர்ந்த ஜெயராமன்(61), விருதுநகர் அச்சங்குளம் முத்துராஜ்(47), சேலம் சுக்கம்பட்டி சின்னனூரை சேர்ந்த சுரேஷ்குமார்(34), அடைக்கனூர் காட்டுவளவை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் நேற்று வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

பட்டாசு தயாரிப்பதற்காக சிவகாசியில் இருந்து வெடிமருந்து பெட்டிகளை பிக்கப் வேனில் டிரைவர் சுரேஷ்குமார் கொண்டு வந்தார். இதனை இறக்கி குடோனில் வைத்தபோது வெடிமருந்து பெட்டி தவறி விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில் ஹலோ பிரிக்ஸ் கல்லால் கட்டப்பட்டிருந்த சிறிய குடோனில் இருந்த வெடி மருந்துகளும் வெடித்து கட்டிடம் தரைமட்டமானது. இதில் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி ஜெயராமன் பலியானார். முத்துராஜ், டிரைவர் சுரேஷ்குமார் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

The post வெடிமருந்து பெட்டி தவறி விழுந்ததில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; தொழிலாளி பலி: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Jayakumar ,Salem Kuppanur Viliyambatty ,Kudon ,Karipatti Viliyampatty ,Diwali Festivals ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம்...