×

அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: எண்ணூரில் உள்ள தனியார் ரசாயன உரத்தொழிற்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அமோனியா வாயு கசிந்து காற்றில் பரவியது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலாநிதி வீராசாமி எம்பி., எம்எல்ஏக்கள் கே.பி.சங்கர், மாதவரம் சுதர்சனம், மண்டலக் குழுத்தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எண்ணூர் தனியார் உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட 42 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தேன். எல்லோரும் நலமுடன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரிரு மணி நேரத்தில் வீடு திரும்புவர். மேலும், எண்ணூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சென்னை மாநகராட்சியும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து, பெரியகுப்பம் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. மேலும், அந்த தனியார் உரத்தொழிற்சாலையை தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் மூலம் தற்காலிகமாக மூடுவதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Ennore ,Dinakaran ,
× RELATED துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து