×

அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை: கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி உட்பட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி: எண்ணூரில் கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும் கடந்த காலங்களில் இதேபோல் பல முறை வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது உண்மை என்றால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதே பாதிப்பை இந்நிறுவனமும் ஏற்படுத்தியதாகத் தான் கருத வேண்டியிருக்கும். இது குறித்து மாசுக்கட்டுபாட்டு வாரியமும், காவல்துறையும் விசாரணை நடத்தி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெறாத ஆலைகளின் செயல்பாடுகளை, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களைக் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்து, 3 மாதங்களில் அறிக்கை பெற்று முழுமையாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: இத்தொழிற்சாலையில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தவில்லை என்றும் எனவே, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். எனவே, ஆலை நிர்வாகம், மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமென்றும், அரசு நிர்வாகங்கள் அதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தனியார் ஆலையினால் ஏற்பட்ட வாயுக்கசிவுக்கு உரிய விசாரணை, நடவடிக்கை மேற்கொண்டு, ஆலையின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் பாதுகாப்பு, அப்பகுதி வாழ் மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை தமிழ்நாடு அசு உறுதி செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வாயுக்கசிவால் பாதிப்படைந்திருக்கும் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதோடு, வடசென்னையைச் சுற்றியிருக்கும் தொழிற்சாலைகள் அனைத்திலும் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உரிய ஆய்வின் மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்: சென்னை எண்ணூரில் கோரமண்டல் ரசாயன தொழிற்சாலை இருந்து நேற்று முன்தினம் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

அமோனியா கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதை உரிய விசாரணை நடத்தி கண்டறிந்திட வேண்டும். எச்சரிக்கை விடுக்க தவறிய ஆலை மீது வழக்கு பதிவு செய்திட வேண்டும். 1984-ல் போபாலில் யூனியன் கார்பைடு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். அந்த விபத்து ஒரு பெரும் துயராக மாறாத வடுவாக இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே தமிழக அரசு ரசாயன தொழிற்சாலைகளின் ஆபத்துக்களை உணர்ந்து, அது போன்றதொரு பெருந்துயர் ஏற்படுவதற்கு முன்னர், முதற்கட்டமாக சென்னைக்கு அருகில் அமைந்துள்ள இந்த கோரமண்டல் ரசாயன ஆலையின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து, சிறப்பு வல்லுனர் குழுவை அமைத்து ஆலையில் முழுமையாக சோதனை நடத்திட வேண்டும்.

The post அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை: கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anbumani ,BAMAK ,Dinakaran ,
× RELATED சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச்...