×

ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் மூலம் கர்நாடக அரசிடம் இருந்து தமிழ்நாடு காவிரி நீரை பெற்று வருகிறது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மீனம்பாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் புகார் அளிக்க, இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு விமானத்தில் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

முன்னதாக, அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டுக்கு உடனடியாக 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியும், இதுவரை ஒரு சொட்டு நீர்கூட கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இந்த காவிரி நதிநீர் ஆணையத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான் ஒன்றிய அரசு அமைத்தது. தற்போது இப்பிரச்னை குறித்து ஒன்றிய அரசிடம் முறையிட, இன்று தமிழகத்தில் அனைத்து கட்சி எம்பிக்களின் குழு புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்று, அங்கு இன்று மாலை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துகிறோம்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களில் ஒவ்வொன்றுக்கும் கர்நாடக மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் மூலம் கர்நாடக அரசிடம் இருந்து தமிழ்நாடு காவிரி நீரை பெற்று வருகிறது. இது நியாயமல்ல என்பது என் கருத்து. தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை கர்நாடக அரசு நியாயமாக திறந்துவிடும்வரை, நாங்கள் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். கடந்த 20 ஆண்டுகளாக இதேபோல்தான் நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நதிநீர் ஆணையம் நேரில் ஆய்வு செய்து, தண்ணீரை திறந்து விடும்படி கூறி வருகிறது. இதனால் கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை, வறட்சிதான் நிலவுகிறது என அம்மாநில அரசு பொய்யான காரணங்களை கூறி வருகிறது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தொல்.திருமாவளவன் எம்பி, நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்துக்கு தரவேண்டிய நீரின் அளவு என்ன என்பதை காவிரி மேலாண்மை வாரியம் சொல்லியிருக்கிறது. அதன்படி, நொடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்துவிட வேண்டும் என்பதுதான் வரையறை. தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, நமக்கான தேவையை பெற காவிரி நதியில் குறிப்பிட்ட அளவு நீரை திறந்துவிட வலியுறுத்தி பெறும் நிலையில் நாம் இருக்கிறோம். இன்று மாலை புதுடெல்லியில் தமிழக எம்பிக்கள் குழுவினர் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து, தமிழகத்துக்குத் கர்நாடக அரசு திறந்து விடக்கூடிய தண்ணீரின் அளவை சரியாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம் என்றார்.

The post ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் மூலம் கர்நாடக அரசிடம் இருந்து தமிழ்நாடு காவிரி நீரை பெற்று வருகிறது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka government ,Supreme Court ,Minister ,Duraimurugan ,Meenambakkam ,Chief Minister ,M.K.Stal ,Union Minister ,Chennai ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...