×

நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல்: மதுரை எய்ம்ஸ் நிலவரம் குறித்தும் மக்களவையில் ஒன்றிய அமைச்சர் விளக்கம்..!!

டெல்லி: பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்குவதில், ஒன்றிய அரசின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் அதன் புதிய கட்டுமானங்கள் மீண்டும் பேசுபொருளாகி இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் நீண்ட காலமாக முடங்கிக்கிடந்த மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கும் பெயரளவில் உயிரூட்டி இருக்கிறார்கள். கட்டுமானத்துக்காக சுற்றுச்சுழல் அனுமதி கோரி மதுரை எய்ம்ஸ் சார்பில் விண்ணப்பித்து இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.

இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது; ‘பிரதம மந்திரியின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 22 எய்ம்ஸ்களில் போபால், புவனேசுவரம், பாட்னா, ஜோத்பூா், ராய்பூா், ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. கோரக்பூா், நாகபுரி, ரே பரேலி உள்பட 10 எய்ம்ஸ்களில் கற்றல் மற்றும் கற்பித்தல், ஆராய்ச்சி, நோயாளிகளுக்கான சிகிச்சை போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், ராஜ்கோட் (குஜராத்), விஜய்பூா் (ஜம்மு), மதுரை (தமிழ்நாடு), அவந்திபோரா (காஷ்மீா்), ரேவரி (ஹரியாணா), தா்பங்கா (பிகாா்) ஆகிய 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஏற்கெனவே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 2022-23ல் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை’ என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

The post நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல்: மதுரை எய்ம்ஸ் நிலவரம் குறித்தும் மக்களவையில் ஒன்றிய அமைச்சர் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Delhi ,Manchuk Mandavia ,EU government ,Republic ,Dinakaran ,
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...