×
Saravana Stores

அதிமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பட்டியலை வெளியிடுங்கள் பார்ப்போம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர், செவிலியர் காலிப்பணியிடம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்: மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்தது என்பது உண்மை. ஆனால், நிலுவையில் இருந்த 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன்பு 1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் ஆட்சி செய்த 4 ஆண்டு காலத்தில் கொண்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களின் பட்டியலை உங்களிடம் சமர்பிக்க சொல்லுங்கள். 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. 8713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் எதிர்கட்சி தலைவர் அவர்களின் 4 ஆண்டு கால ஆட்சியில் கொண்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் பட்டியல்களை தெரிவிக்க சொல்லுங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஒன்றிய அரசிடம் கேட்டு 25 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வந்துள்ளார்.

மினி கிளினிக் என்பது ஒராண்டு காலத்திற்கான திட்டமாகும். இது தேசிய சுகாதார குழுமத்தால் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தார், செவிலியர்கள் இதில் இல்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்தவுடன் இது நிறுத்தப்பட்டது. மேலும் இந்த மினி கிளினிக் நிறைய இடங்களில் சுடுகாடு இடங்கள், கழிவறை போன்ற இடங்களில் அமைக்கப்பட்டது. இது அந்த ஓராண்டு காலத்துடன் நிறுத்தப்பட்டது. இதன் பிறகு முதல்வர் டெல்லிக்கு சென்று மொகாலா கிளினிக்கை பார்த்து தமிழ்நாட்டில் அதுபோன்ற மருத்துவமனைகள் வரவேண்டும் என்று முடிவு செய்து, 708 நகர்புற நல வாழ்வு மையங்கள் அமைக்க தொடங்கி 500 நகர்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

The post அதிமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பட்டியலை வெளியிடுங்கள் பார்ப்போம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,M. Subramanian ,Edappadi Palaniswami ,Chennai ,Dinakaran ,
× RELATED 2021ம் ஆண்டுக்கு பின் வெளிநோயாளிகள்...