×

ஆகாயத்தாமரையில் அழகிய பொருட்கள்

தூத்துக்குடியில் தொழிற்சாலை…
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி…

குளம், ஏரி, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்து படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை, நீர்நிலைகளைக் கெடுத்து சுற்றுச்சூழலுக்கும் வேட்டு வைக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த ஆகாயத்தாமரை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுவதோடு, மட்க வைத்தால் நல்ல இயற்கை உரமாகவும் மாறி விவசாயத்திற்கு கைகொடுக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, அதன் தண்டுகளை காயவைத்து பல்வேறு அழகிய கைவினை கலைப்பொருட்களை தயாரித்து அசத்துகிறார்கள் அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர்.

‘‘2020 டிசம்பரில் மேலாத்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் குளங்கள், வாய்க்கால் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அகற்றப்படும் ஆகாயத்தாமரையைப் பயன்படுத்தி கைவினை கலைப்பொருட்கள் தயார் செய்து, பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி வெளிநாடு சென்றிருந்தபோது ஆகாயத்தாமரையில் செய்த கலைப்பொருட்களை வாங்கியுள்ளார். அவரது ஆலோசனைப்படி, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வாங்கிவந்த, ஆகாயத்தாமரையில் செய்த கலைப்பொருட்களை இங்கிருந்தவர்களிடம் காண்பித்தோம். அதேபோல் கலைப்பொருட்களை தயார் செய்ய முடிவெடுத்தோம். இங்குள்ள குச்சிக்காடு சேவை மையத்தில் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 60 பெண்களுக்கு ஆகாயத்தாமரையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட கைவினை கலைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இதுவரை 250 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குளங்கள் மற்றும் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதோடு, அதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. பயிற்சி பெற்ற பெண்கள் வீட்டில் இருந்த படியே கைவினைப்பொருட்கள் தயாரித்து வருமானம் பார்த்து வருகிறார்கள்.” என தங்களின் பயணத்துக்கான காரணத்தை விவரித்தார் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஸ்குமார்.

ஆகாயத்தாமரை கலைப்பொருள் தயாரிப்பதற்காக தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலையே அமைய உள்ளது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரமணாதேவி இதுகுறித்து பெருமை பொங்க பேசினார். “தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூர், நாசரேத், கொட்டாரங்குறிச்சி, சிறுதொண்டநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் நீர்நிலை களில் இருந்து ஆகாயத்தாமரையை சேகரித்து, அதன் தண்டுப் பகுதிகளை காயவைத்து, அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பல்ேவறு விதமான கைவினை கலைப்பொருட்கள் தயார் செய்கிறார்கள். ஆகாயத்தாமரை கலைப்பொருட்கள் தயார் செய்ய உதவும் பல்வேறு வடிவங்களிலான
மோல்டுகளை தயார் செய்வதற்கான பயிற்சியும் இவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கலைப்பொருட்களை தயார்செய்துவரும் 25 பெண்களை ஒருங்கிணைத்து, தூத்துக்குடி ஆகாயத்தாமரை கிளஸ்டர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களே இச்சங்கத்தின் பொறுப்பாளர்களாக இயங்கி வருகிறார்கள். இச்சங்கத்தை புதிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக தமிழக அரசு அங்கீகரித்ததோடு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நிறுவனத்திற்கு ரூ.2.3 கோடியை முழு மானியமாக வழங்கி இருக்கிறார். டூவிபுரம் பகுதியில் ஆகாயத்தாமரை கிளஸ்டர் சங்கத்துக்காக புதிய தொழிற்சாலை கட்டுவதற்கான நிலம் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தொழிற்சாலைக்கான கட்டிட வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த ெதாழிற்சாலை திறக்கப்பட உள்ளது. இங்கு கலைப்பொருட்களை இயந்திரங்கள் மூலம் மெருகூட்டுதல், சோலார் டிரையர் மூலம் காயவைத்தல், இயற்கை முறையிலான வர்ணங்கள் பூசுதல், பேக்கிங் செய்தல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதன்மூலம் 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆகாயத்தாமரையில் கலைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது செடார் என்ற நிறுவனம். ஆகாயத்தாமரை கிளஸ்டர் சங்கத்தின் தயாரிப்புகளை வாங்கி, பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த பொருட்கள் ரூ.30 முதல் ரூ.1,500 வரை விலைபோகிறது. வீட்டில் இருந்தபடியே மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள் சுயஉதவிக்குழுவினர். பச்சையாக உள்ள ஆகாயத்தாமரை தண்டு ஒரு கிலோ ரூ.5 வரையும், நன்கு காய்ந்த நிலையில் இருக்கும் தண்டு ஒரு கிலோ ரூ.250 வரையும் விலை வைத்து விற்கப்படுகிறது. கலைப்பொருட்களை தயார் செய்யும் பல்வேறு நிறுவனத்தினர் இதை தாராளமாக வாங்கிக் கொள்கின்றனர். இயற்கை முறையில் தயார் செய்யப் படும் இந்த ஆகாயத்தாமரை கலைப்பொருட்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. வரும்காலத்தில் இக்கலைப் பொருட்களின் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், அதற்கான உற்பத்தியும் அதிகரிக்கும்” என்கிறார் ரமணாதேவி. நாசரேத் அருகே மூக்குப்பீறி என்ற ஊரில் தனது வீட்டில் ஆகாயத்தாமரை தண்டிலிருந்து கைவினை கலைப்பொருட்களை தயார் செய்து கொண்டிருந்த எல்சி மற்றும் சுதா, அழகுராணி, சீதாலெட்சுமி, ஆறுமுகசுந்தரி ஆகியோரை சந்தித்தோம்.

“எங்களைப்போல் பயிற்சி பெற்ற பெண்கள் தற்போது அவரவர் வீட்டில் வைத்தே ஆகாயத்தாமரையில் மதிப்புக் கூட்டப்பட்ட கலைப்பொருட்களை தயார் செய்கிறார்கள். இதற்கு தேவையான ஆகாயத்தாமரையை கடம்பாகுளம், கடையனோடை வாய்க்கால், புரையூர் வாய்க்கால், குரங்கணி தாமிரபரணி ஆறு உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள நீர்நிலைகளில் இறங்கி நாங்களே சேகரிப்போம். சேகரித்த ஆகாயத்தாமரையின் இலை, வேர்ப்பகுதிகளை வெட்டி அகற்றிவிட்டு அதன் தண்டுப்பகுதியை மட்டும் சுத்தம் செய்து 10 நாட்கள் வரை காயவைத்து, சரியான முறையில் பதப்படுத்தி வைப்போம். பின்னர் காய்ந்த ஆகாயத்தாமரை தண்டினைப் பயன்படுத்தி வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படக்கூடிய பல்வேறு அழகிய கைவினை கலைப்பொருட்களை தயார் செய்கிறோம். இதற்காக நாங்கள் பயன் படுத்தும் மோல்டுகளை தெர்மாகோல், காட்போர்டு அட்டைகளைக் கொண்டு, தேவைப்படும் பொருட்களுக்கேற்ப பல வடிவங்களில் தயார் செய்து வைத்துள்ளோம். இதுபோன்ற மோல்டுகளைப் பயன்படுத்தி பேனாஸ்டாண்டு, தொப்பி, அர்ச்சனைக்கூடை, டைனிங்டேபிள்மேட், தலையணை, பல விதமான கூடைகள், கைப்பைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினை கலைப்பொருட்களை தயார் செய்கிறோம். இப்ெபாருட்களின் விலை குறைந்தது ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.3,000 வரை உள்ளது. இந்த பொருட்கள் தற்போது வெளிநாடுகளுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது” என்கிறார் எல்சி.

The post ஆகாயத்தாமரையில் அழகிய பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Aagayatamar ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!