×

2 வாரத்துக்கு பிறகு சபரிமலையில் பக்தர்கள் எளிதில் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரு வாரங்களாக பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்தது. ஆனால் தரிசனத்திற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வரிசையில் காத்துக் கிடந்த பக்தர்களுக்கு உணவோ, தண்ணீரோ கூட கொடுக்கப்படவில்லை. கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டதின் பிறகே சபரிமலையில் நிலைமை படிப்படியாக கட்டுக்குள் வரத் தொடங்கியது. சபரிமலையில் முன்பு பணிபுரிந்த அனுபவம் இல்லாத போலீசார் நியமிக்கப்பட்டதும் நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அனுபவமுள்ள மற்றும் திடகாத்திரமான போலீசாரை 18ம் படியில் பணிக்கு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து நேற்று முதல் இந்திய ரிசர்வ் பட்டாலியன் மற்றும் கேரள ஆயுதப்படை போலீசார் 18ம் படியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மிக விரைவாக பக்தர்களை படி ஏற்றி வருகின்றனர். நேற்று முதல் நிமிடத்திற்கு 75க்கும் மேற்பட்ட பக்தர்கள் 18ம் படி ஏறிச் செல்கின்றனர். ஒரு மணி நேரத்தில் சுமார் 4600 பக்தர்கள் ஏறுவதால் நேற்று சன்னிதானத்தில் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமல் எளிதில் தரிசனம் செய்து திரும்பினர்.

இதனால் சபரிமலையில் இயல்புநிலை திரும்பியது. எந்த இடத்திலும் பக்தர்கள் அதிக நேரம் தடுத்து நிறுத்தப்படவில்லை. ஒரு சில மணி நேரத்திலேயே எளிதில் தரிசனம் செய்து திரும்பும் நிலை தற்போது உள்ளது. நேற்று காலையில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தாலும் பக்தர்கள் சிரமமில்லாமல் தரிசனம் செய்தனர். நேற்று 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* கடந்த ஆண்டைவிட ரூ.20 கோடி வருவாய் குறைவு
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சபரிமலையில் நிருபர்களிடம் கூறியது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடம் மண்டல காலத்தில் நடை திறந்த 28 நாட்களில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.134.44 கோடியாகும். கடந்த வருடம் இதே நாளில் ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரூ.20 கோடிக்கு மேல் குறைந்துள்ளது. 14ம் தேதி வரை மொத்தம் 17 லட்சத்து 56 ஆயிரத்து 830 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடம் 19 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர். கடந்த வருடத்தை விட ஒன்றரை லட்சம் பேர் இந்த வருடம் குறைவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2 வாரத்துக்கு பிறகு சபரிமலையில் பக்தர்கள் எளிதில் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan Temple ,
× RELATED சபரிமலைக்கு புதிய தந்திரி