×

அதிமுக ஆட்சி காலத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு : சென்னை பல்கலைக்கழகம் விசாரணை நடத்த ஐகோர்ட் ஆர்டர்

சென்னை : அதிமுக ஆட்சி காலத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்குமாறு பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கி 2018ம் ஆண்டு சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை குழுவை அமைக்க கோரி சையது ரஹமத்துல்லா என்பவர் 2018ம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு மனு அளித்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பல்கலைக்கழகத்தில் 22 பேராசிரியர்கள் நியமனம் முடிவடைந்து விட்டது. இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக விண்ணப்பதாரர் எவரும் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, மனுதாரரின் புகார் இதுநாள் வரை பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, கடந்த 2018ம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த புகார் மீது சென்னை பல்கலைக்கழகம் விசாரணை நடத்த வேண்டும். இதில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post அதிமுக ஆட்சி காலத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு : சென்னை பல்கலைக்கழகம் விசாரணை நடத்த ஐகோர்ட் ஆர்டர் appeared first on Dinakaran.

Tags : iCourt ,University of Chennai ,Chennai ,Chennai High Court ,Chennai University ,
× RELATED ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு...