சென்னை: நடிகர்கள் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட நடிகர் ராம்கி கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடிகர் சங்கத்துக்கு தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நடிகர் சங்கத்தின் நீண்டநாள் கடனை அடைத்ததற்கு நன்றிக் கடனாக விஜயகாந்த் பெயர் சூட்ட வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(டிச.28) சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து நேற்று விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக கட்சி அலுவலகம் முன்பு லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
இதையடுத்து இன்று பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீவுத்திடலில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது என தேமுதிக தரப்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராம்கி விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது; “விஜயகாந்தின் குணத்திற்காகவும், அவரின் தலைமை பண்பிற்காகவும் தான் அவருக்கு கேப்டன் என்ற பெயர் கிடைத்தது.
அவர் ஒரு நல்ல மனிதாபிமானி. அவருக்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம். அவர் மிகவும் எளிமையானவர், எதார்த்தமானவர், உண்மையானவர். சினிமால நிறைய பேருக்கு வாழ்க்கை கொடுத்தவர். நடிகர்கள் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்டினால் நாங்கள் அவருக்கு செய்யும் நன்றியாக இருக்கும் என நினைக்கிறன். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என நடிகர் ராம்கி கூறினார்.
The post நடிகர்கள் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட நடிகர் ராம்கி கோரிக்கை appeared first on Dinakaran.