மும்பை: மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாத சிறை தண்டனை வழங்கி பாந்த்ரா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாசிகார், ராஜா, கயாமத் சே கயாமத் தக், ஜங்கிள் குயின், அஞ்சான், சலாம் மும்பை உள்ளிட்ட பெரும்பாலான இந்தி படங்கள், தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் தலிப் தாகில் (70). இவர், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையை அடுத்த கார் புறநகர் பகுதியில் காரை ஓட்டிச் சென்றபோது, ஆட்டோவில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
இதில், ஆட்டோவில் பயணித்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், தலிப் தாகில் மீது வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவ சோதனையில் அவர் மது அருந்தியிருப்பது உறுதியானது. இதுகுறித்த வழக்கு மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 5 வருடங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், தலிப் தாகிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பில் கூறியிருப்பதாவது: விபத்தின் போது குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தலிப் தாகில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது மருத்துவ பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது. அதேசமயம், சாட்சிகளும், ஆதாரங்களும் அவர், விபத்தை ஏற்படுத்தியதை உறுதி செய்கின்றன. எனவே, அபராதம் விதிப்பதோடு நிறுத்திவிடமுடியாது என்பதால், தலிப் தாகிலுக்கு 2 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
The post போதையில் காரை ஓட்டி விபத்து நடிகருக்கு 2 மாதம் சிறை appeared first on Dinakaran.
