×

தமிழகம் முழுவதும் கொளுத்தியது வெயில் மதுரையில் 105 டிகிரியாக பதிவானது: 20 மாவட்டங்களில் மழை பெய்தது

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று மதுரையில் நேற்று 105 டிகிரி வெயில் நிலவியது. அதேநேரத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கரூர் மற்றும் மதுரையில் இயல்பைவிட 3 முதல் டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடியில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் நேற்று 105 டிகிரி(பாரன்ஹீட்) கொளுத்தியது. அத்துடன் நாகப்பட்டினம் 102 டிகிரி, சென்னை, கடலூர், கரூர், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. இந்நிலையில், வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 3ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்ப நிலையைப் பொறுத்தவரையில் 100 டிகிரி வரை இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் .

The post தமிழகம் முழுவதும் கொளுத்தியது வெயில் மதுரையில் 105 டிகிரியாக பதிவானது: 20 மாவட்டங்களில் மழை பெய்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai ,Chennai ,
× RELATED மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில்...