×
Saravana Stores

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொதுமக்களிடம் இருந்து ரூ.930 கோடி முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக பாசி நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. சில நாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்றதாக ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோருக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில், அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மற்றும் போலீசாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

இதை எதிர்த்து பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், மனுதாரர் லஞ்சம் கேட்டு பெற்றார் என்பதை நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது. அவர் சார்பாக மற்றவர்கள் வாங்கினார்கள் என குற்றம் சாட்டியது வெறும் யூகத்தின் அடிப்படையிலானது. எனவே, இந்த வழக்கில் இருந்து பிரமோத் குமாரை விடுவிக்க மறுத்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்த கோவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து பிரமோத் குமார் விடுவிக்கப்படுகிறார் என்று உத்தரவிட்டார்.

The post பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IBS ,Pramod Kumar ,Chennai ,Pasi ,Kamalawalli ,Dinakaran ,
× RELATED சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது