சென்னை: சென்னை பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவித்து மேம்படுத்தும் விதமாக 2024-25ம் கல்வியாண்டில் 208 சென்னை தொடக்கப் பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 24,700 மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக சென்னையைச் சுற்றியுள்ள கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மேயரின் 2024-25ம் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், சென்னை பள்ளிகளில் 208 தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 16,366 மாணவர்கள் ஜூலை 2024 இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் 2024 வரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த சுற்றுலாவானது திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1) தொடங்கி வாரந்தோறும் மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சென்னை தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஒரு பேருந்துக்கு சுமார் 55 மாணவர்கள் வீதம், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாநகர போக்குவரத்துக் கழகம் மூலமாக முதற்கட்டமாக ரூ.31.29 லட்சம் மதிப்பில் 298 பேருந்துகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அழைத்துச் செல்லப்படும் இந்தக் கல்விச் சுற்றுலாவில் பட்டேல் நகர், ஹரிநாராயணபுரம் மற்றும் ஓல்க் ஏரியா சென்னை தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த 275 மாணவர்கள், ஆரத்தூன் சாலை-சென்னை தொடக்கப் பள்ளியைச் சார்ந்த 50 மாணவர்கள், கப்பல் போலு தெரு-சென்னை தொடக்கப்பள்ளியைச் சார்ந்த 100 மாணவர்கள், எம்.எம். 6வது லேன்-சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் வண்ணாரப்பேட்டை-சென்னை உருது ஆண்கள் தொடக்கப்பள்ளியைச் சார்ந்த 55 மாணவர்கள், அம்மையம்மாள் தெரு-சென்னை தொடக்கப்பள்ளியைச் சார்ந்த 150 மாணவர்கள், கூக்ஸ் சாலை-சென்னை தொடக்கப்பள்ளியைச் சார்ந்த 100 மாணவர்கள், எண்ணூர் குப்பம் மற்றும் முகத்துவாரக் குப்பம் சென்னை தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த 50 மாணவர்கள், தாழங்குப்பம் மற்றும் காமராஜ் நகர் சென்னை தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த 110 மாணவர்கள், அன்னை சிவகாமி நகர் சென்னை தொடக்கப் பள்ளியைச் சார்ந்த 110 மாணவர்கள், புதிய நப்பாலயம் மற்றும் பழைய நப்பாலயம் சென்னை தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த 55 மாணவர்கள், மணலி புதிய டவுன் சென்னை தொடக்கப் பள்ளியைச் சார்ந்த 200 மாணவர்கள் என மொத்தம் 18 சென்னை தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த 1255 மாணவர்கள் மற்றும் ஒரு பேருந்திற்கு 4 ஆசிரியர்கள் என 24 பேருந்துகளில் நேற்று கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
அதன்படி, மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும் வாகனங்களை மேயர் பிரியா நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தக் கல்விச் சுற்றுலாவில், சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் மூலமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சிக்னல் பார்க், காவலர் அருங்காட்சியகம், வண்டலூர் உயிரியல் பூங்கா, பெரம்பூர் ரயில் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தக் கல்விச் சுற்றுலா மூலம் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பொது அறிவு சிந்தனையுடன் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல் உருவாக்கப்படும். மீதமுள்ள 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்தக் கல்வியாண்டில் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்வது தொடரும். இந்த தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்விச் சுற்றுலாவானது டிசம்பர் 2024 கடைசி வாரத்தில் முடிவடையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post நிதிநிலை அறிவிப்பின்படி பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா: மேயர் பிரியா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.