×

சென்னையில் வரும் 4ம் தேதி அண்ணாமலை தலைமையில் பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டம்: அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வதா? என்பது குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 4ம் தேதி பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல், அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டம் வரும் 4ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும், அந்த தொகுதிகளில் பாஜவின் பலம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

அதே நேரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, ‘என் மண்… என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். ராமேசுவரத்தில் வருகிற 28ம் தேதி தொடங்கும் இந்த பாத யாத்திரையை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் சில மாவட்ட தலைவர்களின் செயல்பாடு சரியில்லை என்று தலைமைக்கு புகார் வந்துள்ளது. அவர்களை மாற்றிவிட்டு புதிய மாவட்ட தலைவர்களை நியமிப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜ இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக முன்னாள் முதல்வர் ெஜயலலிதா குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை தெரிவித்தார். இது அதிமுகவினரிடையே கடும் ெகாந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினர் கடவுளாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலைக்கு, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை கழற்றி விட வேண்டும் என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜ தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அதிமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்வதா அல்லது வேறு கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதனால் வரும் 4ம் தேதி நடைபெற உள்ள பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் வரும் 4ம் தேதி அண்ணாமலை தலைமையில் பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டம்: அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வதா? என்பது குறித்து முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Baja District Leaders ,Anamalai ,Chennai ,baja district ,baja ,annamalai ,Parliament ,
× RELATED சென்னையில் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கைது