×

செங்கோட்டை அருகே விநாயகர் கோயிலில் மணி அடிக்கும் காகம்

செங்கோட்டை: செங்கோட்டை அருகே விநாயகர் கோயிலில் பூஜை நடைபெறாத நாட்களில் காகம் ஒன்று மணி அடித்து செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து குண்டாறு அணைக்கு செல்லும் பாதையில் உள்ளது இரட்டை குளம் கிராமம். இங்கு உள்ள குளத்தின் கரையில் அமைந்துள்ளது சக்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு புதன், சனிக்கிழமை மட்டும் காலை, மாலை என இரு வேளைகளில் பூஜை நடந்து வருகிறது. இது தவிர்த்து வாரத்தின் மற்ற 5 நாட்களிலும் காகம் ஒன்று வந்து காலை 7 மணிக்கும் மாலை 5 மணிக்கும் கோயிலின் முன்பு உள்ள மணியை அடித்து விட்டு செல்கிறது.

இது கடந்த மூன்று மாத காலமாக தினந்தோறும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுகுறித்து இந்த கோயிலின் அருகே டீக்கடை நடத்தி வரும் சசிகுமார் என்பவர் கூறியதாவது: குண்டாறு அணைக்கு செல்லும் சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் சனி மற்றும் புதன்கிழமை தவிர்த்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் காகம் ஒன்று கோயிலின் முன்பு உள்ள மணியை அடித்து ஒலி எழுப்பி வருகிறது. இது கடந்த மூன்று மாத காலமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இதை நாங்கள் உன்னிப்பாக கவனிக்காமல் இருந்தோம்.

ஆனால் இது வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டும் அதுவும் பூஜை நடைபெறாத நாட்களில் மட்டும் காகம் வந்து மணி அடித்து செல்வதை தற்போது கவனித்துள்ளோம். பூஜை நடக்கும் புதன், சனிக்கிழமைகளில் இந்த காகம் வருவதில்லை. மற்ற நாட்களில் காகம் வந்து மணியை ஒலிக்க செய்கிறது. இப்பகுதியை சுற்றி உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதிசய காகத்தை பார்த்து செல்கின்றனர் என்றார்.

The post செங்கோட்டை அருகே விநாயகர் கோயிலில் மணி அடிக்கும் காகம் appeared first on Dinakaran.

Tags : Vinayagar Temple ,Red Fort ,Dinakaran ,
× RELATED ஆலந்துறை அருகே வீரபத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா