×

பன்முகத் திறமை கொண்ட இளம் வீரமங்கை!

நன்றி குங்குமம் தோழி

சோசியல் மீடியா, ஸ்மார்ட்போன் என எந்த வலையிலும் சிக்காமல் கராத்தே, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், பாராட்டுகளையும் குவித்து அசத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த பதினாறு வயது நிரம்பிய மோன்யா ராவ். சிங்கப்பெண் விருது, சிறந்த பேச்சாளர் விருது, வீரமங்கை விருது போன்ற விருதுகளை இளம் வயதிலேயே வென்ற பெருமைக்குரியவர். சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ரோல் மாடலாக வலம் வரும் இவர் கராத்தே விளையாட்டு குறித்தும் அவரது சாதனைகள் மற்றும் விருதுகள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

நான் +2 மாணவி. எங்களுடையது மிகவும் எளிமையான குடும்பம். ஆனாலும் என்னுடைய திறமைக்கும் நான் போட்டியில் பங்கேற்கவும் என் குடும்பம்தான் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அவர்களின் ஊக்கம் மற்றும் எனக்கு கொடுக்கும் சுதந்திரம்தான் என்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறது.

கராத்தே மீது ஆர்வம்…

பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பு மூலமாகத்தான் எனக்கு கராத்தே அறிமுகமானது. அப்போது எனக்கு 10 வயசு இருக்கும். அதன் பிறகு வீட்டில் சொன்ன போது, அவர்களும் அதற்கான பயிற்சியில் என்னை சேர்த்துவிட்டார்கள். பயிற்சியின் போது, பல போட்டிகளில் பங்கு பெற ஆரம்பித்தேன். பிறகு கராத்தே என்னுடைய உலகமாக மாறியது. என் முதல் கராத்தே மாஸ்டர் ராஜாமணி, இந்தியாவிலேயே முதல் முறையாக 10வது டான் பட்டம் பெற்றவர். அவரைத் தொடர்ந்து அருண் மாஸ்டர் மற்றும் உமா மகேஸ்வரி மாஸ்டர். இவங்க மூணு பேர் இல்லாமல் என்னால் கராத்தேவில் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது. மாநிலம் மற்றும் தேசிய அளவில் நான் பதக்கங்களை குவித்ததற்கு காரணம் இவர்கள் கொடுத்த கடினமான பயிற்சிதான்.

பேச்சுப் போட்டி…

மேடையில் பேச வேண்டும் என்றாலே, அதற்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும். நான் முதல் முதலாக மேடையில் ஏறி பேச ஆரம்பித்த போது எனக்கு 7 வயசு. அப்போது என் முன் சுமார் 50 பேர் இருந்தார்கள். ஆனால் நான் கூட்டத்தை எல்லாம் பார்த்து அஞ்சாமல் தைரியமாக பேசினேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுக்க, அதனைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றேன். வெற்றியும் பெற்றேன். ஒரு சில போட்டிகளில் தோல்வியும் அடைந்திருந்தாலும், அதைக்கண்டு துவண்டு விடாமல், அடுத்தடுத்த போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தேன். எப்போதும், எதையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் அணுகுவது மட்டுமே எனக்குப் பிடித்தமானது.

பதக்கங்கள், கோப்பைகள்…

கராத்தே, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என பலவகையான போட்டிகளிலும் பங்கேற்று இதுவரை 200க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றுள்ளேன். குறிப்பாக மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளேன். எதிர்காலத்தில் உலகளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்பதற்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன். சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் எனது திறமையை வெளிப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒருபுறம் படிப்பு, மற்றொருபுறம் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கராத்தே என பிசியாக இருக்கிறேன்.

கராத்தே… பேச்சுப் போட்டி…

கராத்தே மற்றும் பேச்சுப் போட்டி… இந்த இரட்டை குதிரையில் சவாரி செய்ய நான் பின்பற்றும் முக்கியமான விஷயம் டைம் மேனேஜ்மென்ட். என்னதான் காலை முதல் மாலை வர பள்ளி, பயிற்சி வகுப்பு என பம்பரமாக சுற்றினாலும், இரவில் வீட்டுப்பாடங்களை முடித்தப் பிறகே படுக்கைக்குச் செல்வேன். எந்த சூழ்நிலையிலும் படிப்பிற்காக, எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டியை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதேபோல் படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த மறந்தது கிடையாது. என் மாஸ்டர் அடிக்கடி சொல்வார் “நோ பெயின், நோ கெயின்”.இதைத்தான் நான் தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

இன்றைய இளம் தலைமுறையினரின் கவனத்தை சிதறடிக்க செல்போன், சோசியல் மீடியா என பல இருக்கு. இதில் சிக்காமல் தப்பிக்க மார்ஷியல் ஆர்ட், ஸ்போர்ட்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இது உங்களுடைய மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இன்ஸ்பிரேஷன்…

என் அம்மா. அவங்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கேன். எப்படி நேரத்தை மேனேஜ் செய்யணும். பெரியவர்களை மதிப்பது, தோல்வியை கண்டு துவண்டுவிடக்கூடாது, கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். நம்மை ஊக்குவித்தவர்களையும், உயர்த்திவிட்டவர்களையும் என்றும் வாழ்வில் மறக்கக்கூடாது என படிப்படியாக பல விஷயங்களை கற்றுக்கொடுத்தார். மேலும் எங்கு என்ன போட்டி எப்போது நடக்கிறது, அதில் நான் எப்படி பங்கேற்க வேண்டும் என அனைத்தும் அம்மாதான் பார்த்துக் கொள்வார். என்னை அந்தப் போட்டிகளில் பங்கு பெற செய்து ஊக்கப்படுத்துவதும் அவர்தான்.

எதிர்கால இலக்கு…

கராத்தே மேல் இருக்கும் என் கவனம் என்றுமே குறையாது. அதே சமயத்தில் எனக்கு எதிர்காலத்தில் வழக்கறிஞர் ஆக வேண்டும். நீதிக்காகவும், மக்களுக்காகவும் உழைக்க வேண்டும். கராத்தே மற்றும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். நான் எனக்குப் பிடித்த அனைத்து விஷயங்களையும் செய்ய எனக்கு இன்று வரை உறுதுணையாக இருப்பது என் அம்மா. அங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கேன்.

இப்படிப்பட்ட அம்மாவை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா ஒரு பக்கம் எனக்கு தேவையான அனைத்தும் செய்தாலும் அப்பா, தாத்தா, பாட்டி என அனைவரும் நான் அடுத்த கட்டத்திற்கு நகர காரணம். அவர்களின் ஊக்கமும், பாசமும்தான் என் சாதனைகளுக்கு அடித்தளம். என் பள்ளி தலைமையாசிரியர் ரெஜினா மேரி மேம் மற்றும் என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார் இளம் வீராங்கனை மோன்யா ராவ்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post பன்முகத் திறமை கொண்ட இளம் வீரமங்கை! appeared first on Dinakaran.

Tags : Monya Rao ,Chennai ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...