×

மாணவர்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பேராசிரியர்!

நன்றி குங்குமம் தோழி

நான்கு சகோதரர்களுக்கு மத்தியில் பாசமலர் தங்கையாக பிறந்தவர் கலா. அண்ணன்களின் பாசத்தில் நனைந்து வளர்ந்த கலாவும் தன்னால் முடிந்த பாசத்தினை மற்றவர்களுக்கு செலுத்த வேண்டும் என்று விரும்பினார். இதற்காக தன்னை ஒரு குடும்ப பந்தத்திற்குள் ஈடுபடுத்தாமல், கல்வி சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு தன் மாணவர்களுக்காகவே இவரின் வாழ்வின் உயிர் மூச்சு என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறார். மதுரை கோசாகுளத்தின் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் கலா.

இவர் தன் பள்ளி மாணவ, மாணவியர்கள் படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டு துறையிலும் சாதனைகள் புரிய வேண்டும் என்ற உயர் லட்சியத்தோடு புதிய திட்டங்கள், செயல்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய கல்விப் பணி மற்றும் அதில் இவர் மாணவர்களுக்கு அளித்து வரும் சேவை குறித்து பகிர்ந்தார்.

*உங்களுக்கு கல்விப்பணியில் ஆர்வம் ஏற்படக் காரணம்?

‘‘என்ன காரணம் என்பதற்கு பதிலாக யார் காரணம் என்று சொன்னால்தான் இந்த கேள்வி முழுமையடையும். தன் வாழ்நாள் முழுக்க கல்விப்பணி மட்டுமே செய்வேன் என்று வாழ்ந்து காட்டி எனக்கு முன்உதாரணமாக திகழ்ந்தவர். அவரைப்போல் நானும் பலருக்கு படிப்பறிவு தந்து அவர்கள் வாழ்வில் முன்னேற வைப்பதை முழுநேர பணியாக இருக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுக்க வைத்தவர். அவர் வேறு யாருமில்லை… என்னைப் பெற்றெடுத்த தந்தை தான். பள்ளி ஆசிரியராக அப்பா வேலை பார்த்து வந்தார். அம்மா இல்லத்தரசிதான். ஆனால் அப்பாவின் கல்விப்பணியினை ஊக்குவித்தவர் என் அம்மா.

அது மட்டுமில்லாமல் இவர்கள் இருவருமே நான் ஆசிரியர் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். ஆசிரியர் பணியின் முக்கியத்துவம் குறித்து சிறுவயது முதலே எனக்கு சொல்லித்தந்து வளர்த்தார்கள். நான் இப்போது மதுரையின் மிகவும் புகழ்பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியில் ஈடுபட இவர்கள் இருவரும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

*பிறந்தது, படித்தது, ஆசிரியர் பணியில் ஈடுபட்டது குறித்து…

‘‘நான் பிறந்தது, படித்தது எல்லாம் மதுரையில்தான். இளங்கலையில் வேதியியல் படிச்சேன். அதன் பிறகு முதுகலையில் ஆங்கிலம் படித்து பட்டம் பெற்றேன். படித்து முடித்ததும் வேறு பள்ளியில் தான் பணியில் சேர்ந்தேன். 2001ம் ஆண்டில் இந்த பள்ளியில் முதலாம் வகுப்பு ஆசிரியராக தான் பணியில் சேர்ந்தேன். என்னுடைய திறமையை அறிந்து சில வருடங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலப் பாடம் எடுக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

ஆங்கிலம் மட்டுமில்லாமல் வேதியியல் மற்றும் அறிவியல் பாடங்களையும் பயிற்றுவித்தேன். அதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான பயிற்சியாளராகவும் இருந்தேன். கல்வி மற்றும் மாணவர்களின் வளர்ச்சி மேல் எனக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடு, கடின உழைப்பு என்னை இணை தலைமை ஆசிரியர் பணியில் ஈடுபட வைத்தது. அதனைத் தொடர்ந்து தற் போது தலைமை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டேன்.

*தலைமை ஆசிரியராக நீங்க ஆற்றி வரும் சேவை…

‘1995ல் 42 மாணவர்களுடன் மதுரையில் இந்தப் பள்ளி துவங்கப்பட்டது. உயர்ந்த தரக் கல்வி, ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, திறமை, மேம்பாடு என மதுரையில் தலைமையாக கொண்டு காரியாபட்டி, மேலூர், தேனி, சாத்தூர் ஆகிய இடங்களில் கிளைகளை அமைத்து மெட்ரிக்குலேஷன் மற்றும் CBSE என இரண்டு பாடத்திட்டங்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது பத்தாயிரம் மாணவ, மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். தலைமை ஆசிரியராக தலைமை கிளை மட்டுமில்லாமல் அனைத்து கிளைகளையும் நான் கவனம் செலுத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் மற்ற கிளைகளில் உள்ள ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களையும் இங்குள்ள அனைத்து செயல்பாட்டினை பின்பற்ற செய்கிறேன். பாடத்திட்டங்கள் முதல் தேர்வு வரை அனைத்தும் அனைத்து கிளைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். எங்கள் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஹாஸ்டல் வசதி இருப்பதால், அதை மிகவும் கவனமா பார்த்துக் கொள்வது குறித்து பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்.

ஹாஸ்டலில் மட்டுமில்லாமல் ஒழுக்கத்தில் சிறு பிரச்சனை வராமல் பாதுகாத்து வருகிறோம். +1 மற்றும் +2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளித்து வருகிறேன். அது தவிர எங்க பள்ளியில் JEE, CLAD மற்றும் CAக்கான பயிற்சியும் அளிக்கிறோம். காரணம், எங்க பள்ளி மாணவர்கள் தங்களின் திறமையினை மேம்படுத்த அனைத்தும் ஒரே கூரையின் கீழ் தர வேண்டும் என்பது தான் என் நோக்கம்.

*BRAINDEMICS பற்றி கூறுங்கள்…

இந்த பாடத்திட்டம் இரண்டரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கானது. இது செயல்வழி கற்றல் முறை. லண்டனில் குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் மழலையர் கல்வித்துறை வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட NCERT பாடத்திட்டம். இதன் மூலம் குழந்தைகளின் கற்றல் திறன் எந்தவித ஏற்றத் தாழ்வின்றி சீராக இருக்கும். உளவியல் ரீதியாக குழந்தைகளை அணுகுவதால், பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்காமல் ஆர்வத்தோடும், மனச்சோர்வின்றி வருகிறார்கள். செயல்வழி கற்றல் என்பதால் அவர்களின் ஆளுமைத்திறன் மேம்படுகிறது.

*வேறு மாறுபட்ட வகுப்புகள்…

கன்வென்ஷன் முறையில் பாடம் நடத்தி வருகிறோம். ஆசிரியர் பாடம் எடுப்பாங்க, அவங்க சொல்ல சொல்ல பாடங்களை மாணவர்கள் புத்தகத்தில் எழுதுவார்கள். இன்றைய போட்டி நிறைந்த உலகில் இது உதவாது. கிரியேட்டிவிட்டி இருந்தால்தான் அவர்களால் எதிர்காலத்திற்கு ஏற்ப ஈடு கொடுக்க முடியும்.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை LEAD புரோகிராம் செய்கிறோம். டிஜிட்டல் முறையில் பாடங்களை சொல்லித் தருவது. ஆசிரியர் 20 நிமிடம் மட்டுமே வகுப்பெடுப்பார்கள். அதன் பிறகு அவர்களை குழுவாக பிரித்து நடத்தப்பட்ட பாடம் குறித்து கலந்தாய்வு நடைபெறும். ஒவ்வொரு குழுவின் பங்கேற்புக்கு ஏற்ப அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு பாடம் எளிதாக புரியும், மறக்க மாட்டார்கள், பாடத்தில் கவனம் சிதறாமல் இருப்பார்கள்.

*படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறன்…

படிப்பு அவசியம்… அதே சமயம் மற்ற கலை சார்ந்த விஷயத்திலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஓவியப் போட்டியில் எங்க பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியம் முதல் பரிசு பெற்றது மட்டுமல்ல, கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் நீச்சல் போட்டி, ஓட்டப்பந்தயங்கள் போன்ற விளையாட்டு துறையிலும் அவர்கள் பல பரிசுகள் மற்றும் சாதனைகளை புரிந்து வருகிறார்கள். ஆங்கில வழிக் கல்வித் திட்டம் என்றாலும், தமிழ் மொழிக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தமிழ் விழாக்கள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் என ஆண்டு முழுதும் நடைபெறும்.

தொகுப்பு : விஜயா கண்ணன்

The post மாணவர்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பேராசிரியர்! appeared first on Dinakaran.

Tags : Saffron Kala ,
× RELATED நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!