×

பலத்த காற்று, கனமழையின்போது தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி? கலெக்டர் விளக்கம்

நாகர்கோவில், டிச.4: குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாழை மற்றும் மரவள்ளி பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய கட்டணத்தை செலுத்தி சாகுபடி செய்வதற்கான அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களுடைய பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 1 ம் தேதி வரை இருப்பினும் விவசாயிகள் அந்நாள்வரை காத்திராமல் தங்களுடைய பயிர்களை புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு முன்னதாகவே பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 தென்னை மரங்களைப் பொறுத்த வரை இளம் ஓலைகளைத் தவிர்த்து காய்ந்த மட்டைகள் மற்றும் முதிர்ச்சியான தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றி விடுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  விவசாயிகள் தனது தென்னந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை தவிர்த்து விட வேண்டும். இதனால் தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இறுகி மரம் சாய்ந்து விடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும். புயல் காற்று வீசும் சமயம், காற்று மரங்களின் ஊடே புகுந்து செல்லும் வகையில் பக்கவாட்டு கிளைகளையும் அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்து மரம் வேரோடு சாய்ந்து விடுவதை தடுக்கலாம்.வாழை, மரவள்ளி, பப்பாளி, மா, பலா உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை முடிந்த அளவிற்கு சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் கம்புகளை கொண்டு ஊன்றுகோல் அமைக்க வேண்டும்.

மாமரங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். மரவள்ளிப் பயிரைப் பொறுத்தவரை காற்றினால் வேருடன் சாய்ந்து விடும் என்பதால் இளம்பயிரில் வேர்ப்பகுதியில் நன்றாக மண் அணைக்க வேண்டும். 90 சதவீதம் முதிர்ச்சி அடைந்திருந்தால் அதனை உடனடியாக அறுவடை செய்து விடலாம்.ரப்பர் மரங்களை பொறுத்தவரை சிறிய செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகளால் கயிற்றினால் கட்ட வேண்டும். மேலும் செடியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்து உள்நோக்கி சாய்வு அமைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும். ரப்பர் பால்வடிக்கும் பகுதியில் பாதுகாப்பு பூச்சு பூச வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மழை பாதுகாப்பு கவசம் உபயோகப்படுத்த வேண்டும்.   இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...