புரெவி புயலால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை தயார்

தஞ்சை, டிச. 3: தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்க கடலில் தற்போது உருவாகியுள்ள புரெவி புயலால் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளின் அடிப்படையில் பருவமழை காலங்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளாக 195 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இந்தாண்டு பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பருவமழை பாதிப்புகளை தவிர்ப்பதற்கு மாவட்ட அளவில் ஒரு குழுவும், ஒவ்வொரு வருவாய் கோட்டங்களுக்கும் ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் நிலை அலுவலரும், ஒவ்வொரு வட்டங்களுக்கும் ஒரு துணை ஆட்சியர் நிலை அலுவலரும், மாவட்டத்தில் உள்ள 50 சரகங்களுக்கும் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர்களும் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புகளின்போது பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக புதிதாக கட்டப்பட்டுள்ள 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 251 நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் பேரிடரால் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1,42,998 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பேரிடர்கள் தொடர்பான பாதிப்புள் மற்றும் புகார்களை கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: