×

இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவின் சிறந்த படைப்புகள் கரிகாலச்சோழன் விருதுக்கு தேர்வு

தஞ்சை, டிச. 3: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் அளிக்கப்படும் 2018ம் ஆண்டுக்கான கரிகாலச்சோழன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் 2007ம் ஆண்டு தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை நிறுவப்பட்டது. அந்த அறக்கட்டளை வாயிலாக ஆண்டுதோறும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவை சேர்ந்த சிறந்த தமிழ் படைப்புகளுக்காக கரிகாலச்சோழன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2018ம் ஆண்டு கரிகாற்சோழன் விருதுக்கான போட்டியில் மூன்று நாடுகளில் வெளிவந்த தமிழ் படைப்புகள் பங்கேற்றன. இலங்கையில் இருந்து 14 புத்தகங்கள், சிங்கப்பூரில் இருந்து 9 புத்தகங்கள், மலேசியாவில் இருந்து 17 புத்தகங்கள் இப்போட்டியில் பங்குபெற்றன.

இந்நூல்களை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் நடுவர்களாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் துறைத்தலைவரும், தமிழ் படைப்பாளருமான பாலசுப்ரமணியன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை பேராசிரியர் விஜயராணி, திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் சுப்பிரமணியன் ஆகியோரும் செயல்பட்டு மூன்று நாடுகளிலிருந்து வந்திருந்த படைப்புகளில் இருந்து சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர். இதில் இலங்கையை சேர்ந்த எரிமலை புத்தக எழுத்தாளர் ஞானசேகரன், மலேசியாவை சேர்ந்த வானம் என்னும் போதிமரம் புத்தக எழுத்தாளர் பிரான்சிஸ், சிங்கப்பூரை சேர்ந்த மூங்கில் மனசு புத்தக எழுத்தாளர் இன்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விருது வழங்கும் விழா விரைவில் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும் அறக்கட்டளை நிறுவனர் சிங்கப்பூர் முஸ்தபாவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, 2019ம் ஆண்டுக்கான விருதுகளும் இவ்விழாவில் இணைத்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Singapore ,Malaysia ,Sri Lanka ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...