×

மணமேல்குடி அருகே பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு

அறந்தாங்கி, டிச.3: மணமேல்குடி அருகே செல்போன் கடையை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் உமர்(25). இவர் கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு, வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு உமரின் செல்போன் கடைக்கு வந்த 2 கொள்ளையர்கள், கடையின் வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் கருப்பு மையை பூசியுள்ளனர்.

பின்னர் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை கடைக்கு வந்த உமர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையின் உள்ளே இருந்த செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. உடனே அவர் கொள்ளை சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையரின் படத்தை கொண்டு கொள்ளையரை தேடி வருகின்றனர். கோட்டைப்பட்டினத்தில் செல்போன் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Manamelkudi ,
× RELATED வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது