×

100 நாள் வேலை திட்ட பயனாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வங்கி அதிகாரிகள் உறுதி மார்க்சிஸ்ட் கம்யூ. முற்றுகை போராட்டம் வாபஸ்

குளித்தலை, டிச.3: 100 நாள் ேவலை திட்ட பெண் பயனாளியின் குடும்பத்திற்கு இழப்பீடுதொகை வழங்க வங்கி அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து குளித்தலையில் வங்கி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்த இருந்த முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் சாரதாம்பாள். இவர் 100 நாள் வேலை திட்டம் பயனாளி. இவர் தான் செய்யும் 100 நாள் வேலை திட்ட பணிக்கான ஊதியம் பெறுவதற்கு குளித்தலை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி பணபரிமாற்றம் செய்து வந்துள்ளார். மேலும் இவர் வங்கி கணக்கிலிருந்து இன்சூரன்ஸ் தொகையினை வங்கி அதிகாரிகள் பிடித்தம் செய்து உள்ளனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சாரதாம்பாள் இறந்து விட்டார். அதனால் வங்கிக் கணக்கில் இருந்து பெறப்பட்ட இன்சூரன்ஸ் தொகைக்கு அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உரிமைதாரர் விண்ணப்பித்துள்ளார்.

இழப்பீடு தொகை வழங்க விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் வங்கி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதால் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரைவில் வங்கி இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குளித்தலை ஒன்றிய குழு சார்பில் வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதென அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று ஒன்றியக்குழு நிர்வாகி கன்னியம்மாள் தலைமையில் மாவட்ட செயற்குழு ராஜு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து செல்வன், ஒன்றிய செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடத்த வந்தனர். அப்போது போலீசார் அவர்களை வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததால் நேற்று நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Bank officials ,
× RELATED ரூ.4,000 கோடி கடன் மோசடி வழக்கு மும்பையில்...