×

சுயதொழில் துவங்க மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியம்

கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்வதற்கு வங்கிக்கடன் மான்யம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் தொகையில், 3ல் ஒரு பங்கு அல்லது ₹25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை மான்யமாக வழங்கப்படும். மேலும், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க, ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்புத்தொகை, பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி ₹50 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்களில் பயனாளிகள் செலுத்த வேண்டிய 5 சதவீத பங்குத் தொகையை, அரசே ஏற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

எனவே, சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபர்கள், அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண். 23ல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சுயதொழில் துவங்குவதற்கு மானியத்துடன்...