×

வேளாண் சட்டத்தை கண்டித்து சேலத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 3: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் போராடும் விவசாயிகள், போலீசாரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் சிஐடியு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு,  மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பப்பட்டன. இதில், சிஐடியு நிர்வாகிகள் தியாகராஜன், வெங்கடபதி, மாதர் சங்கம் ஞானசவுந்தரி, போக்குவரத்து கழக செந்தில்குமார், வேலுமணி, சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு பிரசாரம்:
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கான புதிய பெயர் சேர்த்தல்-நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆத்தூரில் பல்வேறு பகுதிகளில் நாடக கலைஞர்களை கொண்டு பிரசாரம் செய்யப்பட்டது. அப்போது, வீதி வீதியாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதனை ஆத்தூர் கோட்டாட்சியர் துரை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் அன்புச்செழியன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் நாகலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்ப பயிற்சி முகாம்:
இடைப்பாடி வட்ட வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ், நெடுங்குளம் கிராமத்தில் 2020-21ம் ஆண்டிற்கான நெல் பயிரில் சுற்றுச்சூழலை சார்ந்த பொறியியல் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பண்ணை பள்ளி நடைபெற்றது. திட்டத் தலைவர் ஞானசுந்தரம் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி,  விதைச்சான்று அலுவலர் செந்தில்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சந்தோசம் உள்ளிட்டோர் பேசினர். தொழில்நுட்ப மேலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்:
 மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நங்கவள்ளியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நங்கவள்ளி ஒன்றிய நிர்வாகிகள் தங்கவேல், கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், நங்கவள்ளி ஒன்றிய பொருளாளர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய -மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மாற்றுத்திறனாளிகள் மறியல்:
மேட்டூர் தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை ₹3  ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.  கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு  ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. சிலர் திடீரென மறியலில் ஈடுபட்டதால், ஜார்ஜ் பெர்னாண்டஸ், முத்து, பிரான்சிஸ் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : protest ,CITU ,Salem ,
× RELATED சிஐடியு ஆர்ப்பாட்டம்