மானூரில் காங். ஏர் கலப்பை பேரணி

மானூர், டிச.3: மத்தியஅரசை கண்டித்து மானூரில் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி நடந்தது.  விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று மானூரில் ஏர் கலப்பை பேரணி நடந்தது. மானூர் ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய பேரணிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்து பேசினார். பின்னர் மானூர் பஜாரில் பேரணியாக புறப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பேரணியில் பங்கேற்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.  பேரணியில் மாவட்ட வட்டாரத்தலைவர்கள் சொரணம் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாக்கியகுமார், சொக்கலிங்ககுமார், மனோகரன், மாவட்ட ஊடகபிரிவு அருள்ராஜ் மற்றும் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் மானூர் பஜாரில் 30 நிமிடங்கள் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. இதனிடையே மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட 34 பேர் மீது மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காங்கிரசார்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு

 பேரணியில் பங்கேற்ற காங்கிரசார் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்வதாக  கூறினர். எனினும் போலீசார் அவர்களை விட மறுத்ததால் கூட்டத்தினர் போலீசாரை தள்ளிக்கொண்டு செல்ல முயன்றனர். இதில் போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மீது சிலர் விழுந்தனர். தொடர்ந்து போலீசார் பேரணியை செல்ல விடாமல் மாவட்டத்தலைவர் சங்கரபாண்டியனை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். பேரணியில் பங்கேற்ற சிலரை கைது செய்து அழகியபாண்டியபுரம் சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர். மேலும் அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை ஏற்றி செல்ல வாகனம் இல்லாததால் அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.

Related Stories: