வீட்டை விலைக்கு வாங்குவது போல் நடித்து நகை கொள்ளையடித்த 4 பேர் கைது

தென்காசி, டிச.3: தென்காசி அருகே வீடு விலைக்கு வாங்குவது போன்று நடித்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 6 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.   தென்காசியை அடுத்த மேலமெஞ்ஞானபுரம் சீயோன் நகரைச் சேர்ந்தவர் செல்லப்பன் மகன் ரவீந்திரன் (57). நாட்டு வைத்தியரான இவர் தனது வீட்டுக்கு அருகில் புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டை விற்பனை செய்வதற்காக முகநூலில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை பார்த்த சிலர் கடந்த 19.9.2020 அன்று பட்டப்பகலில் கும்பலாக வீட்டை பார்க்க வருவது போன்று வந்துள்ளனர். அப்போது ரவீந்திரன் புதிய வீட்டை சுற்றி காண்பித்து கொண்டிருந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக  ரவீந்திரனை கத்தியை காட்டி மிரட்டி அவரது சகோதரர் மகனை அனுப்பி வீட்டில் இருந்த நகைகளை எடுத்து வரச்சொல்லி அனுப்பி உள்ளனர். இதில் 162 கிராம் எடையுள்ள தங்க நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஏட்டுகள் மரிய ராஜா, அருள், சீவல முத்து, பால்ராஜ், முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் துப்பு துலக்கி வந்தனர்.

 இந்நிலையில் வேலூர் மாவட்டம் கத்துவாச்சேரி விஓசி நகரை சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் மணிகண்ட ராஜா (37), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வெண்டக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் மகன் பாலசுப்பிரமணியன் (35). அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் கார்த்திக்( 33), திருவாரூர் மாவட்டம் ஐயம்பேட்டையை சேர்ந்த பழனிவேல் மகன் அண்ணாதுரை (54) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் வேலூரைச் சேர்ந்த ஆனந்த், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இதுகுறித்து குற்றாலம் போலீசார் கூறுகையில், ‘கொள்ளையில் ஈடுபட்டவர்கள் முகநூல் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். மணிகண்டன் வேலூரை சேர்ந்தவராக இருந்தாலும் வளர்ந்தது வாசுதேவநல்லூரில் தான். இதனால் இந்தப்பகுதி அவருக்கு நன்றாக அத்துப்படி. மேலும் அண்ணாதுரையின் பெயரில் ஒரு சிம்கார்டு பெற்றுள்ளனர். இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்திய நிலையில் அதனை கைவிட்டு விட்டனர். மேலும் வழியில் பாவூர்சத்திரம் பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுத்தபோது சிசிடிவி காட்சிகளும் பதிவாகி உள்ளது. இதனை வைத்து வழக்கில் துப்பு துலக்கப்பட்டது’ என்றனர்.

Related Stories: