×

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை திடீரென ₹50 உயர்வு வர்த்தக காஸ் விலை ₹56.50 அதிகரிப்பு

சேலம், டிச.3: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு மானியமில்லா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை நேற்று திடீரென ₹50 உயர்ந்தது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக, இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்ததால் மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. பிறகு ஜூன், ஜூலை மாதத்தில் விலை அதிரடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.வழக்கமாக மாதத்தின் முதல் நாளில் (1ம் தேதி) விலை மாற்றப்படும் நிலையில், நேற்று(2ம்தேதி) நடப்பு மாதத்திற்கான (டிசம்பர்) வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் திடீரென ₹50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் ₹610ல் இருந்து ₹660 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்காத்தாவிலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹ 50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹56.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் ₹1,354க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதத்திற்கு (டிசம்பர்) 56.50 ரூபாய் அதிகரித்து ₹1,410 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விலையில் தான் நடப்பு மாதம் முழுவதும் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டதால், வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்