நேரடியாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் ஆறாம்பண்ணை ஊராட்சியை மக்கள் முற்றுகை

செய்துங்கநல்லூர், டிச. 3: மத்திய அரசின் நேரடியாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை கண்டித்து  ஆறாம்பண்ணை ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின்படி கிராமப்பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பயனாளியிடம் இருந்து டெபாசிட் தொகையாக ரூ.  ஆயிரமும், பங்களிப்பு தொகையாக  ரூ. 514 வீதம் வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கருங்குளம்  ஒன்றியம், ஆறாம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட ஆறாம்பண்ணை கிராமத்தில்  கடந்த நவம்பர் மாதம் முதல் 890 பேரின் வீடுகளில் நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்தும், இத்திட்டத்தில் குடிநீருக்கு கூடுதலாக வரி வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ஆறாம்பண்ணையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முறப்பநாடு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்து விரைந்துவந்த வைகுண்டம் மண்டல துணை தாசில்தார் சங்கரநாராயணன்,  கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், பிடிஓ பாக்யலீலா, மண்டல அலுவலர் லட்சுமணன், ஆறாம்பண்ணை ஊராட்சி தலைவர் சேக் அப்துல்காதர் உள்ளிட்டோர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கலெக்டர், திட்ட இயக்குநரிடம் இதுகுறித்து தெரிவித்து முடிவெடுப்பது. அதுவரை தற்காலிகமாக வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் உறுதியத்தனர். அதன்பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இருப்பினும் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: