×

புதுவை கலெக்டருக்கு திடீர் மூச்சு திணறல் ஜிப்மர் கொரோனா வார்டில் அனுமதி

புதுச்சேரி, டிச. 3: புதுச்சேரி கலெக்டர் அருண் மூச்சு திணறல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையின் கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.  அவரை நலம் விசாரிக்க சென்ற முதல்வர், அமைச்சர், தலைமை செயலர் ஆகியோர் மருத்துவமனை லிப்ட்டில் 30 நிமிடம் சிக்கி தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று புதிதாக 60 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 37,079 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 70 பேர், கதிர்காமம் மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி கலெக்டரும், சுகாதாரத்துறை செயலருமான அருண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவிட் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், மருத்துவர்கள் ஆலோசனையின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
 இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் கோவிட்  பிரிவில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், தலைமை செயலர் அஸ்வனிகுமார் ஆகியோர் நேற்று மாலை ஜிப்மருக்கு வந்தனர். பின்னர், கோவிட் பிளாக்கின் தரைத்தளத்தில் இருந்து மூன்றாவது தளத்துக்கு லிப்ட்டில் சென்றபோது, திடீரென லிப்ட் பழுதாகி நின்றது.

இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் 30 நிமிடம் லிப்ட்டின் உள்ளே அவரகள் சிக்கி தவித்தனர். அங்கிருந்த ஊழியர்கள் லிப்ட்டின் கதவை உடைத்து மூன்று பேரையும் மீட்டனர். அதன்பிறகு, மற்றொரு லிப்ட்டில் ஏறி சென்று கலெக்டரை சந்தித்து நலம் விசாரித்தனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தனர். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கலெக்டரை சந்திக்க சென்ற முதல்வர், அமைச்சர், தலைமை செயலர் ஆகியோர் 30 நிமிடம் லிப்டில் சிக்கிக்கொண்டு தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suffocation ,collector ,Zimmer Corona Ward ,
× RELATED நடுவானில் மூச்சு திணறல் 7 வயது உபி சிறுமி பலி