நிவாரண தொகை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

திருப்பூர், டிச.3: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ராஜேஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர்கள் ஜார்ஜ் வர்கீஸ், ரமேஷ், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தனியார் நிறுவங்களிலில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும்.உதவித்தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தால், பல்லடம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: