×

கோவையில் இன்று அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்ட பூமிபூஜை

கோவை, டிச. 3 : அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடக்கிறது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்கிறார். கோவை அவினாசி சாலையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிக்னல்கள் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு நேர விரயம் ஆகிறது. இதனால் இச்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  அவினாசி சாலையில் மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக நீளமான மேம்பாலமாக 10.10 கி.மீ. தூரத்திற்கு இப்பாலம் அமைய உள்ளது. உப்பிலிபாளையம் சந்திப்பு பகுதியில் தொடங்கி சித்ரா கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் அமைகிறது.

இந்த மேம்பாலம் முடிவு பெறும் போது விமான நிலையம் மற்றும் அவினாசி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் இதர நகரங்களுக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதில் சென்று விடலாம்.  இந்த மேம்பாலத்துக்கு சென்னையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா  அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடக்கிறது. வ.உ.சி மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைக்கிறார். விழாவில் கலெக்டர் ராஜாமணி, எம்எல்ஏக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Tags : Avinashi Road ,Coimbatore ,
× RELATED மேம்பாலத்தில் டூவீலர் கவிழ்ந்து பெண் படுகாயம்