வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி காங்கிரஸ் ஏர்கலப்பை பேரணி

சென்னை: பாஜ அரசின் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நேற்று ஏர் கலப்பை பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. புயல் காரணமாக சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. சென்னையில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஏர்கலப்பை பேரணி நடத்தப்பட்டது. வடசென்னை காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு காமராஜர் சிலையில் இருந்து தொடங்கியது. ஏர்கலப்பை பேரணியை மாநில பொது செயலாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். அங்கிருந்து ராஜீவ் காந்தி சிலை நோக்கி புறப்பட்டபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 150க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்களை ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி.துரைராஜ், எஸ்.வி.சங்கர், கவிஞர் ராமலிங்க ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் அருகே நடந்த பேரணிக்கு மாவட்டத் தலைவர் க.வீரபாண்டியன் தலைமை வகித்தார். இதில், விஷ்ணு பிரசாத் எம்பி கலந்து கொண்டார். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம் முன்பும்  ஏர் கலப்பை பேரணி நடந்தது.

Related Stories: