பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் ஆற்றுநீரை பார்த்து விட்டு சவடால் பேசுவதா? முதல்வருக்கு திமுக கண்டனம்

சென்னை: “பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல் ஆற்றுநீரை பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா” என்று முதல்வருக்கு மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தாம்பரத்தில் ஒரே நாளில் பெய்த 30 செ.மீக்கும் மேலான மழையாலும், ஏரிகளின் உபரி நீராலும் பாதிக்கப்பட்டு பரிதவித்துக்கொண்டிருந்த செம்மஞ்சேரி, சுனாமி நகர், பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், ஜவஹர் நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள், நம்முடைய குறைகளை கேட்க தான் முதல்வர் வருகிறார் என்று ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால், ஏதோ வெள்ள பாதிப்பை பார்வையிட போகிறேன் என்று சொல்லி எப்போதுமே நிரந்தர நீர்நிலைகளாக இருக்கிற துரைப்பாக்கம் ஒக்கியம் மடுகு, முட்டுக்காடு முகத்துவாரம் போன்ற ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு தன்கடமையை நிறைவேற்றி உள்ளார் முதல்வர். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு, அடுத்த வேளை உணவுக்கு அல்லல்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், இதோ முதல்வர் வருவார், நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவார் என்று காத்திருந்த நிலையில், அவர்களை அலட்சிப்படுத்திவிட்டு, சேற்றுப் பகுதியில் சிவப்பு கம்பளம் விரித்து அதன்மேல் நடந்து சென்று, ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வந்த முதல்வர் இந்தியாவிலேயே இவரைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

சென்னை மாநகராட்சி உருவான காலத்திலிருந்து, சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் வரையில், சென்னையில் இருந்த மழைநீர் வடிகால்வாய்களின் அளவு 636 கி.மீ. மட்டுமே. ஆனால் அவர் சென்னையின் மேயராக, ஆட்சியின் உள்ளாட்சித் துறை அமைச்சராக தமிழகத்தின் துணை முதல்வராக இருந்தபோது ஆற்றிய பணிகளின் விளைவாக தற்போது சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களின் அளவு 2071 கி.மீட்டர் அளவு உயர்த்தப்பட்டது என்பதையும், அதனால் தான் இப்பெரு வெள்ளக்காலத்திலும் சென்னை நகர மக்கள் பெருமளவு பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்பதையும் பழனிசாமி அறிந்திருக்க நியாயமில்லை. எங்கள் தலைவர் அடிக்கடி சொல்வதைப் போல கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவதை இனியாவது முதல்வர் பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: