×

சவுகார்பேட்டையில் போலீசார் போல் நடித்து கேரள நகைக்கடை ஊழியரிடம் 30 சவரன், ரூ.3.50 லட்சம் பறிப்பு

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையில் போலீசார் போல் நடித்து கேரள நகைக்கடை ஊழியரிடம் 30 சவரன், ரூ.3.50 லட்சத்தை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சவுகார்பேட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள், 500க்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளன. இங்கு தங்கம், வெள்ளி ஆகியவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நகை வியாபாரிகள் இங்கு வந்து நகை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவர், தனது கடைக்கு தேவையான 30 சவரன் நகைகளை செய்து தரும்படி சவுகார்பேட்டையில் உள்ள ஒரு கடையில் ஆர்டர் கொடுத்து இருந்தார்.

அதை பெற்றுச் செல்ல கடை ஊழியர் மகேஷ்குமார் (41) என்பவரை நேற்று முன்தினம் சென்னை அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, சவுகார்பேட்டை வந்த மகேஷ்குமார், நகைகளை பெற்றுக்கொண்டு நேற்று காலை கேரளா புறப்பட்டார். இவர், என்எஸ்சி போஸ் சாலை வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் நடந்து சென்றபோது, அங்கு வந்த 4 பேர், மகேஷ்குமாரை மடக்கி, “நாங்கள் போலீஸ், உன்னிடம் உள்ள பையை சோதனை செய்ய வேண்டும்” என கூறியுள்ளனர். அதன்படி, அவர் பையை கொடுத்துள்ளார். பையை சோதனை செய்தபோது, அதில் 30 சவரன் நகைகள், ரூ.3.50 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது.

நகை மற்றும் பணத்துக்கான ஆவணங்கள் இல்லை எனக்கூறிய அவர்கள், முறையான ஆவணத்தை எடுத்துக்கொண்டு யானைகவுனி காவல் நிலையத்துக்கு வரும்படி கூறிவிட்டு, நகைகளை வாங்கி சென்றனர். உடனே, காவல் நிலையம் சென்று விசாரித்தபோது, போலீஸ் என கூறி மர்ம நபர்கள், நூதனமுறையில் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து நகை வியாபாரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பெற்று விசாரித்து வருகின்றனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு பூக்கடை பகுதியில் நகை வியாபாரியிடம் போலீஸ் என கூறி ஒரு கும்பல் நகையை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Kerala ,Saugatuck ,
× RELATED சைபர் கிரைம் -ஒரு அலர்ட் ரிப்போர்ட்! Cyber Extortion