×

மேலக்கோட்டையூரில் பரபரப்பு நிலம் அளவீடு செய்ய வந்தவர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததாக நினைத்து குழப்பம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே மேலக்கோட்டையூரில், நிலத்தை அளவீடு செய்ய வந்தவர்களை ஆக்கிரமிப்பு அகற்ற வந்ததாக நினைத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் மேலக்கோட்டையூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே மத்திய அரசின் ஐஐஐடி, காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விளையாட்டு பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. தற்போது தலைமை செயலக ஊழியர் குடியிருப்பு கட்ட இங்குள்ள அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான இடத்தை அளவீடு செய்வதற்காக செங்கல்பட்டு மாவட்ட வருவாய் ஆய்வாளர் பிரியா, வண்டலூர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, அங்குள்ள தரிசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே ராஜீவ்காந்தி நகர் என்ற பெயரில் 250க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசிக்கின்றனர். இதனால், வருவாய்த்துறையினர் இந்த ஆக்கிரமிப்பு தவிர்த்து மீதி எவ்வளவு நிலம் உள்ளது என்பதை கண்டறிய சிறிய அளவிலான கொடிகளை நட்டு அளவீடு செய்ய முயன்றனர். இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், ஏன் நாங்கள் வசிக்கும் பகுதியில் அளவீடு செய்கிறீர்கள் என கோட்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு, இந்த பகுதியில் அரசு ஊழியர் குடியிருப்பு வர உள்ளதாக வருவாய் துறையினர் கூறினர். உடனே, நாங்கள் குடியிருக்கும் வீடுகளை அகற்றி விட்டு அரசு ஊழியர் குடியிருப்பு கட்டுவதா என கேட்டு, ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மாட்டோம் என கோஷமிட்டனர். பின்னர், கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, தலைமை செயலக ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டப்பட உள்ளது. அதற்காக இடத்தை அளவீடு செய்ய வந்தனர் என கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்., நிலத்தை அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறையினரும் பணியை கைவிட்டு பாதியில் திரும்பினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : blockade ,road ,land ,
× RELATED பாஜக சாலை மறியல்