×

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றிய மத்திய அரசை கண்டித்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளை ஒடுக்கும் வகையில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட பிரதமர் மோடியின் உருவ படத்தை கீழே போட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத், செல்வராஜ், ரவி, அருள் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்