பட்டுக்கோட்டை கோர்ட்டில் நூதன முறையில் ரூ.1.09 கோடி கையாடல்

தஞ்சை, டிச. 2: மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதற்காக நீதிமன்ற கணக்கில் வைத்திருந்த ரூ.1.09 கோடியை நூதன முறையில் கையாடல் செய்ததாக ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தினகராஜா (59). பட்டுக்கோட்டையில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் நீதிமன்ற ஆவணங்களை தணிக்கை செய்தபோது அலுவலக ஆவணங்களின்படி 2018- 2019ம் ஆண்டில் (26.12.2018 முதல் 25.10.2019 வரை) தினகராஜா ரூ.1 கோடியே 9 லட்சத்து 55 ஆயிரத்து 123 கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தங்கவேல் உத்தரவின்பேரில் இந்த நூதன முறைகேடு குறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் நீதிமன்ற ஊழியர் சித்ரா புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து தினகராஜாவை கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த முறைகேட்டை தனிநபராக செய்திருக்க முடியாது.

இதில் வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக தற்போது சிறையில் உள்ள தினகராஜாவை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணை முடிவில் தான் இந்த முறைகேட்டில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: