×

ஓய்வு ஆசிரியர் இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

புதுக்கோட்டை, டிச.2: புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அண்ணாசிலை அருகே முத்துமீனாட்சி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது இந்நிலையில் இந்த மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜீவானந்தம்(67) என்பவர் நேற்று முன் தினம் மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜீவானந்தம் நன்றாக இருக்கிறார் வேறு எந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் நாங்களே அவரை நன்றாக குணமாக்கி விடுவோம் என்று மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஜீவானந்தத்தின் உடல் நிலை மோசம் அடைந்ததால் வெளி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி தங்கள் மருத்துவமனையில் இல்லை அதனால் வெளியில் இருந்து ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஜீவானந்தத்தின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜீவானந்தத்தின் உறவினர்கள் வெளியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து வேறு மருத்துவமனைக்கு மாற்ற முயற்சி செய்யும்பொழுது மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்திவிட்டு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிய மருத்துவர்கள் பணத்தை கட்டிய ஐந்து நிமிடத்தில் ஜீவானந்தம் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஜீவானந்தத்தின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் உரிய முறையில் சிகிச்சை அளிக்காததாலும் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் அவர் உயிரிழந்து விட்டதாகவும் மேலும் அவர் உயிர் இறந்ததை மறைத்து பணம் வசூல் செய்வதற்காக நாடகம் ஆடியதாகவும் ஒரு லட்ச ரூபாய் வரை மருத்துவமனை நிர்வாகத்திற்கு பணம் கட்டியும் காப்பாற்றவில்லை என்று கூறி நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டு ஜீவானந்தத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவமனையை சுற்றி 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஜீவானந்தத்தின் உறவினர்களிடம் போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் முடிவில் மருத்துவ செலவிற்கு கட்டிய தொகை அனைத்தையும் திருப்பித் தருவதாக கூறி சமாதானம் அடைந்த உறவினர்கள் அவரின் உடலை பெற்றுச் சென்றனர்.

Tags : Relatives ,teacher ,hospital ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...