×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக

திருச்சி, டிச.2: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் நேற்று மறியல், முற்றுகையில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இச்சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல் போராட்டம் நடந்தது.

திருச்சி ரங்கத்தில் எல்ஐசி அலுவலகத்தை முற்றுகையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 25 பேர், மோடி அரசே விவசாய விரோத சட்டத்தை பாடையில் ஏற்றுவோம் என எழுதப்பட்ட பதாகைகளை பாடையில் ஏற்றி பேரணியாக எல்ஐசி அலுவலகம் நோக்கி வந்தனர். ரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் வந்தவர்களை வழியிலேயே போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிஐடியூ மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் அரியமங்கலத்தில் பேங்க் ஆப் இந்தியா கிளை அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட வந்தனர். அவர்களை பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்ததால் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை-திருச்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்த 31 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Delhi ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...