×

2 நாட்கள் கனமழை எதிரொலி கண்மாய்களை 24 மணிநேரம் கண்காணிக்க வேண்டும் வத்திராயிருப்பு பொதுப்பணித்துறையினர் அறிவுரை

வத்திராயிருப்பு, டிச. 2:  வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத்தால் விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் புயலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி வத்திராயிருப்பு பகுதி 3 கண்மாய் பாசன விவசாயிகள் எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் உதவி பொறியாளர்கள் சந்திரமோகன், மலர்விழி, ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கனமழையின் காரணமாக பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்தும், சிற்றாறில் இருந்தும் பெரியகுளம், விராகசமுத்திரம், சீவநேரி உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

எனவே விவசாயிகள் இரவு, பகலாக கண்காணித்து கண்மாய்களுக்கு பாதிப்பு இல்லாமல் தண்ணீர் வருவதற்கு ஏற்றாற்போல் அப்படியே தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. பின்னர் உதவிபொறியாளர் சந்திரமோகன் கூறுகையில், ‘கனமழையின் காரணமாக தண்ணீரில் அடித்து செல்ல வாய்ப்புள்ளதால், 2 நாட்களுக்கு ஓடை, ஆறு, கண்மாய்களில் குளிக்க கூடாது. பொதுமக்கள் அவசர தேவை தவிர மற்றபடி வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பான முறையில் இருந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : Public Works Department ,
× RELATED தொழுவூர் கிராம ஏரியில் தேசிய...