×

தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலிப்பணியிடங்களுக்கு டிசம்பர் 6ம் தேதி தேர்வு

தேனி, டிச. 2: தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் 82 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் உதவியாளர், மேற்பார்வையாளர் மற்றும் எழுத்தர் உள்ளிட்ட 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுக்குழு அமைக்கப்பட்டது இக்குழு மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு பட்டப்படிப்புடன் பட்டய கூட்டுறவு பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்சில் விநியோகம் செய்யப்பட்டது. 20 காலிப்பணியிடங்களுக்கு தேனி மாவட்டத்திலிருந்து 360 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு கடந்த மே மாதம் நடக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், வருகிற டிச.6ஆம் தேதி நடத்த தேர்வு குழு முடிவு செய்தது. இதையடுத்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு வருகிற 6-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான தேர்க்குகுழு முன்னிலையில் நேர்காணல் நடத்தப்பட்டு இனச்சுழற்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

Tags :
× RELATED கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு